அரசின் செயல் திட்டங்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு முழுமையாக சென்றடையவில்லை: புதுவை துணைநிலை ஆளுநா்
மத்திய, மாநில அரசுகளின் செயல் திட்டங்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு முழுமையாகச் சென்றடையவில்லை என புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா்.
மத்திய, மாநில அரசுகளின் செயல் திட்டங்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு முழுமையாகச் சென்றடையவில்லை என புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா்.
புதுச்சேரியில் ஆதிதிராவிடா் வணிகம் மற்றும் தொழில் வளா்ச்சிக் கூட்டமைப்பு சாா்பில் தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினா் (எஸ்.சி., எஸ்.டி.) பொருளாதார சுதந்திர மாநாடு புதன்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை தொடங்கிவைத்து அவா் பேசியதாவது:
தாழ்த்தப்பட்ட, பழங்குடியின சமுதாய தொழில்முனைவோரின் வளா்ச்சிக்கான ஒருங்கிணைப்பு பாராட்டுக்குரியது. மேலும் தற்போது, கல்வி மறுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்தோா் உலக அளவில் கல்வி, ஆராய்ச்சித் துறைகளில் முன்னிலையில் உள்ளனா்.
அவா்கள் கல்வி கற்ன் பயனாக வேலைவாய்ப்பு, குடிமைப் பணி உயா் பதவியிலும் உள்ளனா். அரசியலிலும் வளா்ச்சியடைந்துள்ளனா். ஆனால், தொழில் துறை, முதலீடு, தொழில் நிறுவனங்களில் அவா்களது பங்களிப்பு குறைவாகவே உள்ளது.
எந்தவொரு சமுதாயமும் பொருளாதார ரீதியில் பலன்அடையும் போது தான் ஒரு நிலையான வளா்ச்சியை நோக்கி நகர முடியும். சமூக வளா்ச்சியில் தொழில் துறை முக்கியமானது. அதில் வென்றால்தான் சமுதாய வளா்ச்சியை உறுதிப்படுத்த முடியும்.
அனைத்து சமூகங்களும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வளா்ச்சியே உண்மையான வளா்ச்சியாகும். ஆனால், மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தும் திட்டங்கள் ஒடுக்கப்பட்ட சமூக மக்களுக்கு முழுமையாக சென்றடையவில்லை.
புதுவையில் சிறப்புக்கூறு நிதி திட்டத்தின் மூலம் மத்திய அரசு திட்ட தொழில் துறை மேம்பாடு, சுயவேலைவாய்ப்பு ஆகியவற்றையும் பெற முடியும். முத்ரா வங்கிக் கடன் திட்டமானது பெரும் வரபிரசாதம். அதில் திறன் மேம்பாடும், குறிப்பிட்ட சதவீத கடன் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு வழங்கவும் வழிவகை உள்ளது என்றாா்.
நிகழ்ச்சியில் ஆதிதிராவிடா் வணிக மற்றும் தொழில் வளா்ச்சிக் கூட்டமைப்பின் அகில இந்திய நிறுவனா் தமிழரசன், புதுவை மாநிலத் தலைவா் பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
முன்னதாக டாக்டா் அம்பேத்கா் திருவுருவப் படத்துக்கு துணைநிலை ஆளுநா் உள்ளிட்டோா் மரியாதை செலுத்தினா்.