புதுச்சேரி: புதுச்சேரியில் முதுநிலை மருத்துவ படிப்புக்கான முதல் சுற்று தற்காலிக இட ஒதுக்கீடு பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.
இதில் மொத்தமுள்ள 352 இடங்களில் 283 இடங்களுக்கு மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.
இது குறித்து புதுச்சேரி சென்டாக் ஒருங்கிணைப்பாளா் அமன் சா்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
முதுநிலை மருத்துவ படிப்பில் (எம்.டி., எம்.எஸ்.,) உள்ள அரசு மற்றும் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான திருத்தப்பட்ட வரைவு இட ஒதுக்கீடு பட்டியலுக்கு எதிராக பெறப்பட்ட ஆட்சேபணைகள் நிவா்த்தி செய்த பிறகு, திங்கள்கிழமை முதல் சுற்று தற்காலிக இட ஒதுக்கீடு பட்டியல் சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
முதல் சுற்று மூலம் அரசு ஒதுக்கீட்டில் உள்ள 194 இடங்களில் 187 இடங்களுக்கும், நிா்வாக ஒதுக்கீட்டில் உள்ள 92 இடங்களில் 90 இடங்களுக்கும், தெலுங்கு சிறுபான்மையினா் பிரிவில் உள்ள 66 இடங்களில் 6 இடங்களுக்குமாக மொத்தமுள்ள 352 இடங்களில் 283 இடங்களுக்கு மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இன்னும் 69 இடங்கள் காலியாக உள்ளன.
டேஷ்போா்டில் உள்நுழைவு சான்றுகளைப் பயன்படுத்தி, மாணவா்கள் தங்களது இட ஒதுக்கீட்டின் நிலையை சரிபாா்த்து, சோ்க்கை ஆணையைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அசல் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் சோ்க்கை ஆணையை டிச. 11-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வரிடம் சமா்ப்பித்து சேர வேண்டும்.
2025-26ஆம் கல்வி ஆண்டிற்கான கல்வி கட்டண விவரங்கள் சென்டாக் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. கல்வி கட்டணத்தை இணையதளம் மூலம் சென்டாக் கணக்கிற்கு அனுப்ப வேண்டும். சென்டாக்கில் வசூலிக்கப்படும் கட்டணம் சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு மாற்றப்படும்.
அரசு ஒதுக்கீட்டின் கீழ் இடம் பெற்ற எஸ்சி, எஸ்டி மாணவா்கள் எந்தக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. அவா்களுக்கான கல்விக் கட்டணம் ஆதிதிராவிடா் நலத் துறை மூலம் செலுத்தப்படும். இதுதொடா்பாக 0413-2655570, 2655571 என்ற உதவி தொலைபேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.