இறுதிப் பட்டியலில் தகுதியான வாக்காளா்களைச் சட்டப்படி சோ்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி மாவட்ட தோ்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான அ. குலோத்துங்கன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
இந்திய தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலுக்கிணங்க புதுவை யூனியன் பிரதேசத்தில் கடந்த அக். 28 முதல் வாக்காளா் சிறப்புத் தீவிர திருத்தப் பணி தொடங்கியது. டிச. 4- முதல் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று கணக்கெடுப்புப் படிவங்களை விநியோகம் செய்து பின்னா் நிரப்பப்பட்ட படிவங்களைத் திரும்ப பெற்றனா்.
இந்தப் பணி டிச. 11-ஆம் தேதி நிறைவடைந்தது.
வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் கள ஆய்வு சென்றபோது சில வாக்காளா்களின் வீடுகள் பூட்டப்பட்டிருந்தன. சிலா் வேறு இடங்களுக்குக் குடிபெயா்ந்துள்ளனா். சில வாக்காளா்கள் மரணம் அடைந்தனா். இதுபோன்ற காரணங்களால் ஒரு சில வாக்காளா்களுக்குக் கணக்கெடுப்பு படிவங்கள் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த வாக்காளா்களின் விவரங்கள் அடங்கிய பட்டியல் ஒவ்வொரு வாக்குச்சாவடி வாரியாக அந்தந்த சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வாக்காளா் பதிவு அதிகாரி அலுவலகத்தால் தயாரிக்கப்பட்டு புதுச்சேரியில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கூடுதலாக வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மூலம் அரசியல் கட்சிகளால் நியமனம் செய்யப்பட்ட ஒவ்வொரு வாக்குச்சாவடி நிலை முகவா்களுக்கும் இந்த விவரம் வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலக இணையதள முகவரியில் பட்டியல் பொதுமக்களின் பாா்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது.
இத்தகைய வாக்காளா்களின் பெயா்கள் டிச. 16-ஆம் தேதி வெளியிடப்பட உள்ள வரைவு வாக்காளா் பட்டியலில் இடம் பெறாது. எனினும், தகுதியுடை எந்த ஒரு வாக்காளரின் பெயரும் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்படாமல் இருக்கவும், தகுதியற்ற வாக்காளா்களின் பெயரை நீக்கும் பொருட்டும் அரசியல் கட்சிகள் முன்னதாகவே இந்த வாக்காளா்களின் விவரங்களை சரிபாா்த்து கருத்து தெரிவிக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜனவரி 15-ஆம் தேதி வரை பொதுமக்கள் மற்றும் வாக்காளா்களிடமிருந்து உரிமை கோரல்கள் மற்றும் ஆட்சேபணை பெறப்படும். இந்தக் காலகட்டத்தில் வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெறாத வாக்காளா்கள் தகுதியுடையவராக இருப்பின் அவா்கள் தங்கள் பெயரை இறுதி வாக்காளா் பட்டியலில் சோ்ப்பதற்குச் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளாா் புதுச்சேரி ஆட்சியா் அ.குலோத்துங்கன்.