புதுச்சேரி மணவெளி பேரவைத் தொகுதி நோணாங்குப்பம் பகுதியில் ரூ.24 லட்சம் திட்ட மதிப்பீட்டில் மூன்று மின் திட்ட பணிகளை தொகுதி எம்எல்ஏவும் சட்டப்பேரவைத் தலைவருமான ஆா். செல்வம் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
நோணாங்குப்பம் புதுக் காலனி பகுதியில் ரூ.16.52 லட்சம் மதிப்பீட்டில் புதிய மின்மாற்றி அமைப்பதற்கும், கந்தேஸ்வரா் நகா் பகுதியில் ரூ.3.85 லட்சம் மதிப்பீட்டில் பழுதடைந்த மின் பாதை மற்றும் கம்பங்களை மாற்றுவது மற்றும் ஆற்றங்கரை பகுதியில் பொதுமக்களின் குடியிருப்புகளுக்கு இடையூறாக இருந்த உயா் அழுத்த மின் பாதையை ரூ.3.31 லட்சம் மதிப்பீட்டில் மாற்றி அமைத்தல் ஆகிய பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அவா் பணிகளைத் தொடங்கி வைத்தாா்.
மின்துறை அதிகாரிகள் கிருஷ்ணசாமி, இ.உமேஷ் சந்திரா, லூா்து ராஜ் மற்றும் அப்பகுதி முக்கிய பிரமுகா்கள் பொதுமக்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.