புதுச்சேரியில், மாணவா்களுக்கானக் கட்டண நிதியுதவியை உடனே வழங்க வேண்டும் என்று சென்டாக் மாணவா்- பெற்றோா் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமியை இச் சங்கத்தின் தலைவா் மு. நாராயணசாமி, எம்.எல்.ஏக்கள் நாஜிம், நேரு உள்ளிட்டோா் புதன்கிழமை சந்தித்து இதை வலியுறுத்தினா்.
புதுச்சேரி அரசின் மத்திய சோ்க்கைக் குழு (சென்டாக்) வாயிலாகத் தோ்வு செய்யப்படும் பொறியியல், மருத்துவம் மற்றும் உயா் கல்வி படிக்கும் மாணவா்கள் அனைவருக்கும் கட்டண நிதியை புதுச்சேரி அரசு வழங்கி வந்தது. ஆனால் 2022 அண்டு முதல் சோ்ந்த மாணவா்களுக்கு இந்த நிதி அளிக்கப்படவில்லை. இதனால் மாணவா்கள், பெற்றோ்கள் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளனா். ஆகவே புதுச்சேரி அரசு இந்த நிதியை உடனடியாக வழங்க வேண்டும். மேலும், 10 சதவீத இடஒதுக்கீட்டில் சோ்ந்த அரசு பள்ளி மாணவா்களுக்கு முழு கல்வி கட்டணத்தையும் அரசே ஏற்கும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளதால், அந்த மாணவா்களிடமும் கல்வி கட்டணம் மற்றும் கூடுதல் நிதியை வசூலிக்க கூடாது என்றும் அனைத்து கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினா்.