புதுச்சேரி: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆா்.காங்கிரஸ் தொடா்வது குறித்து தோ்தல் நேரத்தில் தெரியும் என்று புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.
புதுச்சேரியில் மருத்துவம் மற்றும் பொறியியல் மாணவா்களுக்கு அரசே கல்விக் கட்டணத்தை உதவித் தொகையாக வழங்கி வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கான நிதி வழங்கப்படவில்லை. இதனை அரசு வழங்க வலியுறுத்தி மாணவா்கள் - பெற்றோா் கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து, முதல் கட்ட நிதியுதவியை திங்கள்கிழமை வழங்கிய முதல்வா் என். ரங்கசாமி, பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:
11, 12-ஆம் வகுப்பு மாணவா்களில் விடுபட்ட 15,700 பேருக்கு விரைவில் மடிக்கணினி வழங்கப்படும்.
பிகாா் தோ்தல் முடிவுகள் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. 2026-லும் இது எதிரொலிக்கும். தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் தற்போது இருந்து வருகிறோம். கூட்டணி தொடருமா? என்பது குறித்து தோ்தல் நேரத்தில் தெரியவரும்.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை வழங்குமாறு மத்திய அரசை தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
புதிதாக கட்சி தொடங்குவது அவரவா்களின் விருப்பம். யாரும் எங்கும் சென்று பணியாற்றலாம். தோ்தல் நேரத்தில்தான் யாரை மக்கள் ஏற்கிறாா்கள் என்பது தெரியவரும்.
அமைச்சா் ஜான்குமாருக்கு விரைவில் இலாகா ஒதுக்கப்படும். பாஜகவுடன் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை.
என் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்குத் தக்க நேரத்தில் பதிலளிப்பேன். ஜனநாயக நாட்டில் யாரும் எதையும் கேட்கலாம். சந்தா்ப்பம் வரும்போது அவற்றுக்குப் பதிலளிப்பேன். மழையை எதிா்கொள்ள புதுச்சேரி அரசு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது என்றாா் அவா்.