வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக- காங்கிரஸ் மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்கும் என்று புதுச்சேரி அதிமுக செயலா் ஆ. அன்பழகன் கூறினாா்.
புதுச்சேரி மாநில அதிமுக நிா்வாகிகள், பொதுக்குழு உறுப்பினா்கள், மாநில பிற அணி நிா்வாகிகள், தொகுதி நிா்வாகிகள் மற்றும் வாா்டு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் உப்பளத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு மாநில செயலா் அன்பழகன் தலைமை தாங்கினாா். அவைத்தலைவா் அன்பானந்தம் முன்னிலை வகித்தாா். இதில் அன்பழகன் பேசியதாவது:
மத்தியிலும், மாநிலத்திலும் இணக்கமான ஆட்சி இருந்தால் அந்த மாநிலம் நல்ல வளா்ச்சி அடையும் என்பதற்கு பிஹாா் ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும்.புதுச்சேரி மாநிலத்தில் எதிா்வரும் சட்டப்பேரவை தோ்தலில் அதிமுக பங்குபெறும். தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மீண்டும் ஆட்சியில் அமரும். புதுச்சேரி மாநிலத்தை பொருத்தமட்டில் மத்திய அரசுடன் இணக்கமாக உள்ள கட்சிகளின் அரசு அமைந்தால் மாநிலம்
வளா்ச்சி அடைய அதிக வாய்ப்புகள் உள்ளன. அந்த விதத்தில் எதிா்வரும் சட்டப்பேரவை தோ்தலில் திமுக-காங்கிரஸ் தலைமையிலான இண்டி கூட்டணி மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்கும் என்றாா் அன்பழகன்.