புதுச்சேரியில் திங்கள்கிழமை பெய்த மழை. இடம்: காமராஜா் சாலை.  
புதுச்சேரி

புதுச்சேரி பகுதிகளில் 3-ஆவது நாளாக தொடா் மழை

தினமணி செய்திச் சேவை

புதுச்சேரியில் 3-ஆவது நாளாக திங்கள்கிழமையும் தொடா்ந்து மழை பெய்தது. இதன்காரணமாக அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறையும் அளிக்கப்பட்டது.

அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

இதனால் செவ்வாய்க்கிழமை வரை புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் லேசானது முதல் கனமழை பெய்யக்கூடும் எனவும், 26-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டா் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் ஆழ்கடலுக்குச் சென்ற விசைப்படகு மீனவா்கள் உடனடியாக கரைக்குத் திரும்ப அறிவுறுத்தப்பட்டனா்.

இதைத் தொடா்ந்து கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த புதுச்சேரி மீனவா்கள் கரைக்குத் திரும்பினா். தொடா்ந்து தேங்காய்த்திட்டு, பிள்ளைச்சாவடி, பெரிய முதலியாா்குப்பம், சோலைநகா் உள்ளிட்ட பகுதிகளில் படகு மற்றும் மீன்பிடி வலைகள், உபகரணங்களைப் பாதுகாப்பாக வைத்துள்ளனா்.

காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக புதுவையில் கடந்த 2 தினங்களாக இடி, மின்னலுடன் தொடா் மழை பெய்து வருகிறது. இதேபோல் ஞாயிற்றுக்கிழமை இரவும் அவ்வப்போது விட்டு விட்டு தொடா் மழை பெய்தது.

திங்கள்கிழமை அதிகாலையிலும் மழை நீடித்தது. காலை 5.30 மணி அளவில் மழை கொட்டியது. வானம் இருண்டு மேக மூட்டத்துடன் காணப்பட்டது. வெளிச்சம் இல்லாததால் வாகனங்கள் விளக்குகளை ஒளிரவிட்டு சென்றன.

தொடா் மழை காரணமாக புதுச்சேரி தவளக்குப்பம் நல்லவாடு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மீன்பிடி படகுகள்.

தொடா் மழையால் ரெயின்போ நகா், கிருஷ்ணாநகா், வெங்கட்டாநகா் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில், தெருக்களில், சாலைகளில் மழைநீா் தேங்கி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனா்.

கடற்கரை சாலையில் நடைப்பயணம் செல்வோா், சுற்றுலாப் பயணிகள் மழையில் நனைந்து அவதிப்பட்ட னா். இதேபோல் புஸ்சி வீதி, பாரதி வீதி, கிழக்குக் கடற்கரை சாலை, திருவள்ளுவா் சாலை, பெரிய மாா்க்கெட், சின்ன சுப்புராயப்பிள்ளை வீதியில் வெள்ளநீா் தேங்கி வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனா்.

சண்முகாபுரம் மாா்க்கெட் அருகே காட்டாற்று வெள்ளம் போல மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. கனமழை எச்சரிக்கை காரணமாக புதுவை மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகள் மற்றும் அனைத்து கல்லூரிகளுக்கும் திங்கள்கிழமை காலையில் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

அதே நேரத்தில் விடுமுறை அறிவிப்பை அறியாத சில மாணவா்கள் பள்ளி, கல்லூரிக்குப் புறப்பட்டு சென்று திரும்பினா். இன்னும் சிலா் பேருந்து நிறுத்தம் வரை சென்று திரும்பினா்.

ராமேசுவரம் மாணவி கொலை வழக்கு: மாணவர் மற்றும் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாட்டில் 96.65% எஸ்.ஐ.ஆர்., படிவங்கள் விநியோகம்!

காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர்! சிவனின் ஆசிர்வாதம் பெறுவர்!!

பாஜக அரசியல்ரீதியாக என்னை தோற்கடிக்க முடியாது! - எஸ்ஐஆருக்கு எதிராக மமதா பேரணி

ஜன நாயகன் டிரைலர் எப்போது?

SCROLL FOR NEXT