படுகை அணைகளில் குளிக்கக்கூடாது என்ற தடை உத்தரவை புதுச்சேரி மாவட்ட ஆட்சியரும் புதுச்சேரி மாவட்ட பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் தலைவருமான அ. குலோத்துங்கன் வியாழக்கிழமை பிறப்பித்துள்ளாா்.
இந்தத் தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. படுகை அணைகளில் நீா் மட்டம் பாதுகாப்பான நிலைக்கு வரும் வரையிலும் அல்லது மறு உத்தரவு வரும் வரையில் இந்தத் தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடுா், சாத்தனூா் அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் நீா் புதுச்சேரியை நோக்கி வரும் நிலையில் எச்சரிக்கை அறிவிப்பையும் மீறி பொதுமக்கள் படுகை அணைகளில், ஆறுகளில் குளிப்பது உள்ளிட்ட செயல்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக சமூக
ஊடகங்களில் காணமுடிகிறது. இதையொட்டி இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இந்த உத்தரவை மீறுவோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த உத்தரவில்
கூறப்பட்டுள்ளது. மேலும் உத்தரவு அடிப்படையில் படுகை அணைகள், ஆறுகளில் குளிக்கவும், விளையாடவும், நீந்தவும், துணிகள் துவைக்கவும், மீன் பிடித்தல், புகைப்படம் எடுத்தல், செல்பி எடுத்தல், படுகை அணையின் மேல் நடந்து செல்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடவும் தடை விதிக்கப்படுகிறது.