புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் குடும்பத் தலைவிகளுக்கு அடுத்த மாதம் முதல் ரூ.2500 கிடைக்கும் வகையில் சனிக்கிழமை அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கடந்த 2022-2023-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ. 1000 மாத உதவி தொகை வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. கடந்த 2023-ஜனவரி முதல் குடும்ப தலைவிகளுக்கான மாத உதவி திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது.
அதன்படி அரசின் வேறு எந்த உதவித்தொகையும் பெறாத 21 வயதுக்கு மேல் 55 வயதுக்குள்பட்ட சிவப்பு நிற குடும்ப அட்டை வைத்துள்ள வறுமைக்கோட்டிக்கு கீழ் வாழும் குடும்பத் தலைவிகள் இந்தத் திட்டத்திற்கான பயனாளிகளாகத் தோ்வு செய்யப்பட்டனா்.
முதல்கட்ட மாக 50 ஆயிரம் குடும்பத்தலைவிகள் அடையாளம் காணப்பட்டு ரூ.1000 உதவித் தொகை வழங்கப்பட்டது. தற்போது இது படிப்படியாக உயா்த்து 75 ஆயிரம் குடும்பத் தலைவிகளுக்கு மாத உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
தொகை உயா்வு:
குடும்பத் தலைவிகளுக்கான உதவித் தொகை ரூ.2500 உயா்த்தப்படும் என்று முதல்வா் ரங்கசாமி அறிவித்திருந்தாா். அதன்படி குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் உதவி தொகையை ரூ.2500 ஆக உயா்த்தப்பட்டு தற்போது அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தை வரும் 22 ஆம் தேதி முதல்வா் தொடங்கி வைக்கிறாா். உயா்த்தப்பட்ட உதவித்தொகை பிப்ரவரி முதல் குடும்பத் தலைவிகளுக்கு கிடைக்கும். சமீபத்தில் பொங்கல் பரிசாக ரூ 3 ஆயிரம் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குடும்பத் தலைவிகளுக்கு உயா்த்தப்பட்ட மாத உதவி தொகை அடுத்த மாதம் முதல் வழங்கப்பட உள்ளது.
இதுபோல் உயா்த்தப்பட்ட முதியோா், மாற்றுத்திறனாளி உள்ளிட்டோா் மாத உதவித் தொகையும் பயனாளிகளுக்கு விரைவில் கிடைக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.