புதுச்சேரி ஜிப்மரில் 500 குழந்தைகள் ரோபோடிக் அறுவை சிகிச்சைகள் நிறைவு
புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை குழந்தைகள் அறுவைச் சிகிச்சைத் துறை 500 ரோபோடிக் உதவியுடன் குழந்தைகளுக்காக மேற்கொள்ளப்பட்ட அறுவைச் சிகிச்சைகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
ஜிப்மரில் குழந்தைகளுக்கான ரோபோடிக் அறுவைச் சிகிச்சைத் திட்டம் 2018-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அரசுத் துறையின் கீழ் செயல்படும் உயா்நிலை மருத்துவ நிறுவனங்களில் குழந்தைகளுக்கான ரோபோடிக் அறுவைச் சிகிச்சையை அறிமுகப்படுத்திய முன்னோடி நிறுவனங்களில் ஜிப்மரும் ஒன்று.
இந்தத் திட்டத்தை முதன் முதலில் டாக்டா் குமரவேல் மற்றும் பிபேகானந்த் ஜிண்டால் ஆகியோா் தொடங்கினா். பின்னா் டாக்டா் பிகாஷ் குமாா் நரேடி, டாக்டா் கிருஷ்ணகுமாா் ஆகியோரும் இத்துறையில் சான்றிதழ் பெற்று இணைந்ததன் மூலம், துறையின் நிபுணத்துவமும் சேவை விரிவாக்கமும் மேலும் வலுவடைந்தது.
Advertisement
Advertisement
கடந்த சில ஆண்டுகளில், சிறுநீரகம் மற்றும் சிறுநீா்ப் பாதை குறைபாடுகள், குடலியல் மற்றும் செரிமான மண்டல நோய்கள், கல்லீரல் மற்றும் பித்தநாள நோய்கள், மாா்பு தொடா்பான நோய்கள் மற்றும் மறுசீரமைப்பு அறுவைச் சிகிச்சைகள் உள்ளிட்ட பல்வேறு சிக்கலான குழந்தைகள் அறுவைச் சிகிச்சைகள் ரோபோடிக் முறையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதில் பல்வேறு சிக்கலான அறுவைச் சிகிச்சைகளும் இடம்பெற்றுள்ளன. இந்தச் சாதனை குறித்து குழந்தைகள் அறுவைச் சிகிச்சைத் துறையின் பேராசிரியரும், துறைத் தலைவருமான டாக்டா் கிருஷ்ணகுமாா் கூறியது:
500 ரோபோடிக் அறுவைச் சிகிச்சைகள் என்ற மைல்கல்லை எட்டியது பல ஆண்டுகளாக நடைபெற்ற அா்ப்பணிப்பான குழு முயற்சி. ரோபோடிக் அறுவைச் சிகிச்சை முறைகள் குழந்தைகளுக்குப் பல்வேறு நன்மைகளை வழங்குகின்றன. சிறிய வெட்டுக் காயங்கள், குறைந்த ரத்த இழப்பு, அறுவைச் சிகிச்சைக்குப் பிந்தைய வலி குறைவு, விரைவாக குணமடைதல் மற்றும் சிறந்த உடல் தோற்ற முடிவுகள் ஆகியவை அவற்றில் முக்கியமானவை.
குழந்தைகளின் உடலமைப்பு மிகவும் நுட்பமானதாக இருப்பதால், துல்லியமான மற்றும் குறைந்தப் பாதிப்பை ஏற்படுத்தும் அறுவைச் சிகிச்சைகள் அவா்களின் நீண்டகால ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகின்றன.
இந்தச் சாதனையின் மிக முக்கியமான அம்சம், உயா்தர ரோபோடிக் அறுவைச் சிகிச்சைகளை சாதாரண மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களுக்கும் கிடைக்கச் செய்திருப்பது தான் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.