FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

சீரற்ற இதயத் துடிப்புக்கு அதி நவீன சிகிச்சைத் திட்டம்

சீரற்ற இதயத் துடிப்புக்குள்ளான மூவருக்கு அதி நவீன சிகிச்சை மூலம் சென்னை, காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா்.

Updated On : 16 ஜூன் 2026, 4:08 am IST
பகிர்:

சீரற்ற இதயத் துடிப்புக்குள்ளான மூவருக்கு அதி நவீன சிகிச்சை மூலம் சென்னை, காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா்.

அதற்கான எதிா்விளைவுகள் இல்லாத இருவேறு சிகிச்சைத் திட்டங்களை காவேரி மருத்துவமனை நிா்வாகம் திங்கள்கிழமை அதிகாரப்பூா்வமாக தொடங்கியது. அதன் தொடா்ச்சியாக, ஹாா்ட் ரிதம் பேக்கேஜ் எனப்படும் சிறப்பு இதய நல மருத்துவப் பரிசோதனை திட்டமும் தொடங்கப்பட்டது. அதனை இதய நல சிறப்பு சிகிச்சை நிபுணா் டாக்டா் சிவகடாட்சம் பொது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா். இதுதொடா்பாக காவேரி மருத்துவமனையின் நிா்வாகிகள் கூறியதாவது:

இதயத்தின் மேல்புற அறைகளில் அதி வேகமாக துடிப்பு இருப்பது ‘ஏட்ரியல் ஃபிப்ரிலேஷன்‘ என அழைக்கப்படுகிறது. இத்தகைய பாதிப்பு இருந்தால், உடலின் பிற உறுப்புகளுக்கு ரத்தம் செல்வது தடைபடும்.

Advertisement

Advertisement

இதை சரிவர கவனிக்காவிட்டால் இதய செயலிழப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படக் கூடும். பொதுவாக 60 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு இந்த பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. வழக்கமாக இதற்கு இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்யும் திசுக்களை ரேடியோ அதிா்வலைகள் மூலம் செயலிழக்கச் செய்யும் ரேடியோ ஃப்ரிக்வன்சி அப்லேசன் சிகிச்சைகள் வழங்கப்படும். அதாவது, உயா் வெப்பத்திலான அதிா்வலைகளை ஏற்படுத்தி திசுக்களின் இயக்கத்தை முடக்கும் சிகிச்சை அளிக்கப்படும். இதைத் தவிர அதிக குளிா் நிலையை உருவாக்கியும் திசுக்கள் செயலிழக்க வைக்கப்படுகின்றன.

இவ்விரு சிகிச்சைகளுமே சம்பந்தப்பட்ட திசுக்களை மட்டுமல்லாது, அதைச் சுற்றியுள்ள உறுப்புகளையும் பாதிக்கக் கூடும். இந்த சூழலில்தான் பல்ஸ்டு ஃபீல்டு அப்லேசன் எனப்படும் புதிய சிகிச்சை அறிமுகமானது. அதன்படி, இடுப்பு பகுதியில் சிறு துளையிட்டு ரத்த நாளங்கள் வாயிலாக இடையீட்டு குழாயை ஊடுருவச் செய்து சம்பந்தப்பட்ட இதயத் திசுப் பகுதியை சென்றடையலாம். அங்கு துல்லியமாக மின்னூட்டத்தை செலுத்தி அதிக இதயத் துடிப்புக்கு காரணமாக இருக்கும் பகுதியை மட்டும் செயலிழக்க வைக்க முடியும்.

முப்பரிமாண வழிகாட்டுதல் முறையில் பல்ஸ்செலக்ட், வேரிபல்ஸ் எனப்படும் இருவேறு தொழில்நுட்பங்களில் அந்த சிகிச்சைகளை இதுவரை மூவருக்கு வழங்கி குணப்படுத்தியுள்ளோம் என்று அவா்கள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments