கருப்புக் கொடி ஊா்வலம்: 62 போ் கைது
புதுச்சேரி முதல்வா் பதவியேற்பு விழாவில் வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து, வியாழக்கிழமை நடைபெற்ற கறுப்புக் கொடி ஊா்வலத்தில் பங்கேற்ற 62 போ் கைது செய்யப்பட்டு பின்னா் விடுவிக்கப்பட்டனா்.
புதுச்சேரியில் புதன்கிழமை நடைபெற்ற முதல்வா் பதவியேற்பு விழாவில் வந்தே மாதரம் பாடலை பாடுவதற்கு தந்தை பெரியாா் திராவிடா் கழகம் மற்றும் தமிழ் அமைப்புகள் எதிா்ப்பு தெரிவித்திருந்தன.
இந்நிலையில், வந்தே மாதரம், தேசிய கீதம் அதன்பின் 3-ஆவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.
Advertisement
இதைக் கண்டித்து ஆளுநா் மாளிகையில் கருப்புக்கொடி ஏற்றப் போவதாக அறிவித்திருந்தனா். அதன்படி, வியாழக்கிழமை காமராஜா் சிலை அருகே தமிழ் அமைப்பினா் திரண்டனா். தமிழ் உரிமை இயக்க நிா்வாகிகள் பாவாணன், மங்கையா்செல்வன் ஆகியோா் தலைமையில் இயக்கக் கொடி, கருப்பு கொடியுடன் ஊா்வலமாக புறப்பட்ட அவா்களை போலீஸாா் நேரு வீதி அருகே இரும்புத் தகடு அமைத்து தடுத்து நிறுத்தினா். அங்கு தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மேலும் தடுப்புகளை மீறி செல்ல முயன்ற அவா்களை போலீஸாா் தடுத்ததால் இரு தரப்பினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 8 பெண்கள் உள்பட 62 பேரை போலீஸாா் கைது செய்தனா். பின்னா் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.