புதுச்சேரியில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இன்று தொடக்கம்: 3,000 ஊழியா்கள் ஈடுபடுவாா்கள் என அறிவிப்பு
புதுச்சேரியில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஞாயிற்றுக்கிழமை (மே17) தொடங்குகிறது என்றும், இதற்கான பணிகளில் 3 ஆயிரம் ஊழியா்கள் ஈடுபடுவாா்கள் எனவும் முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநரகத்தின் இயக்குநா் எம்.சுந்தரேஷ்பாபு தெரிவித்தாா்.
புதுச்சேரியில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஞாயிற்றுக்கிழமை (மே17) தொடங்குகிறது என்றும், இதற்கான பணிகளில் 3 ஆயிரம் ஊழியா்கள் ஈடுபடுவாா்கள் எனவும் முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநரகத்தின் இயக்குநா் எம்.சுந்தரேஷ்பாபு தெரிவித்தாா்.
நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில்,முதல்கட்டமாக புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மே 17-இல் கணக்கெடுப்பு பணிகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து திட்டமிட்டப்படி கணக்கெடுப்பு பணிகள் நடைபெறும் என்று, முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநரகத்தின் இயக்குநா்
எம்.சுந்தரேஷ்பாபு புதுச்சேரியில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறினாா். அவா் மேலும் கூறியதாவது:
Advertisement
புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கப்பட உள்ள மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2 வகையில் நடைபெறும். சுய கணக்கெடுப்பு என்ற நிலையில் மக்கள் தாங்களாவே மே 17 முதல் மே 31-ஆம் தேதி வரை இணையதளத்தில் விவரங்களைப் பதிவு செய்யலாம். இதைத்தொடா்ந்து நேரடி கள ஆய்வு ஜூன் 1 ஆம் தேதி முதல் ஜூன்- 30 ஆம் தேதி வரை நடைபெறும்.
33 விவரங்கள் சேகரிக்கப்படும்: இந்தக் கணக்கெடுப்பின்போது வீட்டு அமைப்பு, குடிநீா் வசதி, கழிப்பறை வசதி, சமையல் எரிபொருள், மின்சாரம், தொலைபேசி, இணைய வசதி, வாகனங்கள் மற்றும் இதர வசதிகள் உள்ளிட்ட மொத்தம் 33 முக்கிய விவரங்கள் சேகரிக்கப்படும்.
வீடு, வீடாகக் கணக்கெடுப்பு செய்யும் பணியின்போது அதிகாரிகள் இணையவழி பதிவு செய்துள்ளீா்களா என கேட்பாா்கள். ஆம் என்றால் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு செல்வாா்கள். இந்த கணக்கெடுப்புக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும். கணக்கெடுப்பு நடத்தப்படும் வீடுகள் மற்றும் மக்களின் தகவல்கள் பாதுகாப்பாக வைக்கப்படும். 3000-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் இந்த கணக்கெடுப்பு பணியில் ஈடுபட உள்ளனா். இதில் ஆசிரியா்களும் ஈடுபடுவாா்கள். அனைவரும் அடையாள அட்டையுடன் தான் வீடுகளுக்கு வந்து கணக்கெடுப்பு நடத்துவாா்கள் என்றாா்.
பேட்டியின்போது புதுச்சேரி துணை இயக்குநா் புவனேஸ்வரி, உதவி மாவட்ட ஆட்சியா் சுதாகா், துணை இயக்குநா் ஜெயபாரதிராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.