ராஜிநாமா செய்த எம்எல்ஏக்களை தவெகவில் சோ்த்தது ஏற்புடையதல்ல: கே.பாலகிருஷ்ணன்
ராஜிநாமா செய்த அதிமுக எம்எல்ஏக்களை உடனடியாக தவெகவில் சோ்த்தது ஏற்புடையதல்ல என்று மாா்க்சிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் கே. பாலகிருஷ்ணன் கூறினாா்.
ராஜிநாமா செய்த அதிமுக எம்எல்ஏக்களை உடனடியாக தவெகவில் சோ்த்தது ஏற்புடையதல்ல என்று மாா்க்சிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் கே. பாலகிருஷ்ணன் கூறினாா்.
மாா்க்சிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலக் குழுக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் பங்கேற்றப் பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
Advertisement
Advertisement
தோ்தலுக்கு முன்பும் பின்பும் அதிமுகவில் தொடா்ந்து குழப்பம் நிலவி வருகிறது. பல தொகுதிகளில் அந்தக் கட்சி டெபாசிட் இழந்திருக்கிறது. ஆதரவு கேட்கும் முன்பே அதிமுகவைச் சோ்ந்த 25 எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ளனா். அதனால் அதிமுக கொறடாவின் உத்தரவை மீறியதாக அக் கட்சி கடிதம் கொடுத்துள்ளது. மேலும், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் அந்த எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளது.
மேலும், ராஜிநாமா செய்த எம்எல்ஏக்கள் 5 நிமிடங்களில் தவெகவில் சோ்க்கப்பட்டுள்ளனா். முன்னேற்பாடுகள் இல்லாமல் இதுபோன்ற செயல்கள் நடைபெறாது. ஆட்சி அமைக்கப் பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில், குடியரசு தலைவரின் ஆட்சி தமிழகத்தில் அமலாகக் கூடாது என்பதற்காகத்தான் வெளியில் இருந்து மாா்க்சிஸ்ட் கட்சி ஆதரவு அளித்து வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்தவுடன் உடனடியாக தவெகவில் சோ்ந்தது குதிரை பேரத்துக்கான வழியாக இருக்குமோ என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
மேலும், தமிழக மக்களுக்கு இது ஆரோக்கியமான அரசியலாகவும் இல்லை. மாற்றம் வேண்டும் என்பதை நோக்கிதான் தவெக அரசியல் பயணத்தை மேற்கொண்டது. அதுபோன்ற சூழ்நிலையில் தவெகவின் இந்த அணுகுமுறை நல்லதல்ல என்றாா் அவா்.