அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெகவில்... ஆரோக்கியமான அரசியலுக்கு ஏற்புடையதல்ல: சிபிஎம் விமர்சனம்!
அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜிநாமா செய்து, தவெகவில் இணைவது ஆரோக்கியமான அரசியலுக்கு ஏற்புடையதல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்தது குறித்து...
அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜிநாமா செய்து, தவெகவில் இணைவது ஆரோக்கியமான அரசியலுக்கு ஏற்புடையதல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செவ்வாய்க்கிழமை விமர்சித்துள்ளது.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்த பிறகு, அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி பூசல் காரணமாக, எஸ்.பி. வேலுமணி தரப்பு மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பு என்று கட்சி இரண்டு அணிகளாகப் பிரிந்தன. இது தொடர்பாக பல சிக்கல்கள் நீடித்து வந்தன.
இந்த நிலையில், எஸ்.பி. வேலுமணி தரப்பு அதிமுக எம்.எல்.ஏ.க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்-தனி), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்யபாமா (தாராபுரம்-தனி) ஆகியோர், திங்கள்கிழமை (மே 25) தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகரை சந்தித்து அவர்களுடைய ராஜிநாமா கடிதத்தை அளித்தனர். மேலும், அதே நாளில் அவர்கள் மூவரும் தவெகவில் இணைந்தனர்.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, அம்பாசமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ.வான இசக்கி சுப்பையாவும் ராஜிநாமா செய்துவிட்டு, தவெகவில் இன்று இணைந்தார்.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூலம் சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற சில சட்டமன்ற உறுப்பினர்கள் திடீரென்று ராஜிநாமா செய்திருப்பதும், உடனடியாக அவர்கள் அனைவரும் தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ந்திருப்பதும் தமிழ்நாட்டில் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. தேர்தலுக்குப் பின்னர் அதிமுகவில் அடுக்கடுக்கான குழப்பமும், கோஷ்டி மோதலும் ஏற்பட்டு ராஜிநாமா என்ற நிலைக்கு வந்துள்ளது.
ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் தவெகவில் சேர்ந்திருப்பது அவர்கள் விரும்பி மேற்கொண்ட முடிவு என்று சொன்னாலும், எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராமல் இயல்பாக நடந்த செயலாக கருத இயலவில்லை. இத்தகைய போக்கு ஆரோக்கியமான அரசியலுக்கு ஏற்றது அல்ல என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.
ஏற்கெனவே, சட்டப்பேரவையில் தவெக ஆட்சிக்கு ஆதரவாக வாக்களித்ததன் மூலம் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு அவர்கள் உள்ளாகி இருக்கிறார்கள். இருப்பினும் உடனடியாக அவர்களை தவெகவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் அதை தவெக ஊக்குவிப்பதாகவே கருத வேண்டிய நிலை ஏற்படும்.
எனவே, இந்த போக்கு ஆரோக்கியமான அரசியலுக்கு ஏற்புடையதல்ல என்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு சுட்டிக்காட்டுகிறது எனக் குறிப்பிட்டுள்ளது.
The Communist Party of India (Marxist) criticized on Tuesday that the resignation of AIADMK MLAs and their joining the TVK is not conducive to healthy politics.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.