தொகுதி அலசல்:விழுப்புரம் தொகுதியை தக்க வைக்குமா அதிமுக?
ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டமாக இருந்த போது, 1952-இல் உருவான பழம்பெரும் தொகுதி விழுப்புரம்.
ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டமாக இருந்த போது, 1952-இல் உருவான பழம்பெரும் தொகுதி விழுப்புரம்.
ரயில், பேருந்து போக்குவரத்தை மையமாக வைத்து ஓரளவு வளர்ச்சியடைந்த நகரம் என்பதைத் தவிர, வேறொன்றும் தொகுதியில் இல்லை.
1952-முதல் தேர்தலில் நாகராஜன் சுயேச்சையாக வென்றார். 1957-இல் காங்கிரûஸ சேர்ந்த சாரங்கபாணி வெற்றி பெற்றார். இதன் பின்னர், 1962-இல் திமுகவைச் சேர்ந்த சண்முக உடையார் வெற்றி பெற்று தொகுதியை திமுக வசமாக்கினார்.
Advertisement
தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்ற அவர், 1977-இல் எம்ஜிஆர் அதிமுக தொடங்கிய முதல் தேர்தலில், அதிமுகவைச் சேர்ந்த கிருஷ்ணனிடம் தோல்வியடைந்தார்.
மீண்டும் 1980-இல் திமுகவைச் சேர்ந்த கு.ப.பழனியப்பனும், 1984-இல், அதிமுகவைச் சேர்ந்த வளவனூர் மணியும் வெற்றி பெற்றதால், திமுக-அதிமுக என்ற நிலை தொடர்ந்து வந்தது.
இதன் பிறகு திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த கல்லூரிப் பேராசிரியர் பொன்முடி 1989-இல் வெற்றி பெற்றார். அடுத்து நடந்த 1991 தேர்தலில், கடலூரைச் சேர்ந்த அதிமுக ஜனார்தனன், பொன்முடியை வீழ்த்தினார்.
இதன் பிறகு 1996, 2001, 2006 தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்று, பொன்முடி இத்தொகுதியை திமுக கோட்டையாக மாற்றினார். இவரை வீழ்த்த வேண்டும் என்பதற்காகவே, திண்டிவனத்தில் வெற்றி பெற்று வந்த சி.வி.சண்முகத்தை, கடந்த 2011 தேர்தலில் அதிமுக விழுப்புரத்தில் களமிறக்கியது.
திட்டமிட்டபடியே, 90 ஆயிரத்து 304 வாக்குகள் பெற்று சி.வி.சண்முகம் வெற்றி பெற்றார். 78 ஆயிரத்து 207 வாக்குகள் பெற்று பொன்முடி தோல்வியடைந்தார். தொடர்ந்து தொகுதியில் அதிமுக வளர்ச்சி பெற்றதோடு, உள்ளாட்சிகளிலும் பெரும்பான்மை பெற்று தக்கவைத்துள்ளது.
இந்நிலையில், இந்தத் தேர்தலில் பொன்முடி திருக்கோவிலூர் தொகுதிக்கு மாறியுள்ளார். இதனால், விழுப்புரம் தொகுதியை திமுக தனது கூட்டணிக்கு தாரைவார்த்துள்ளது.
களம் காணும் வேட்பாளர்கள்: அதிமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏவான சி.வி.சண்முகம், திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலர் அமீர்அப்பாஸ், பாமக சார்பில் மாவட்ட செயலர் பா.பழனிவேல், தேமுதிக சார்பில் எம்எல்ஏ வெங்கடேசன், பாஜக சார்பில் ராம.ஜெயக்குமார், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் கலியமூர்த்தி, நாம் தமிழர் கட்சி சுப்ரமணி உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
அதிமுக: அதிமுக செல்வாக்கு மிகுந்த தொகுதி, திமுகவைச் சேர்ந்த பொன்முடி தொகுதி மாறியது, தொகுதி கைவிட்டுப் போனதால் ஏற்பட்ட திமுகவினரின் அதிருப்தி போன்றவை சி.வி.சண்முகத்துக்கு பலமாக அமைந்துள்ளன.
தொகுதியில் பிரச்னைகள் ஏதுமின்றி அமைதியை விரும்பிச் செல்லும் இவரது குணமும் கூடுதல் பலம். வன்னியர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் ஆதரவும் கிடைக்கும்.
கடந்த முறையைப் போல், வாய் திறக்காமல் மௌனமாக சென்று பிரசாரம் செய்தே சாதிக்க முடியும் என்று நம்புகிறார் சண்முகம். அதனையே இப்போதும் பின்பற்றி வருகிறார்.
வெற்றி பெற்று கடந்த 5 ஆண்டுகளில் நன்றி சொல்ல வராதது, பெரிய திட்டங்கள் எதையும் கொண்டு வராதது, கட்சியில் பதவி பறிப்பு, அவரது சகோதரரின் ஆதிக்கம், கட்சியில் உள்ள கோஷ்டிகள் ஆகியவை சி.வி.சண்முகத்துக்கு பலவீனமாக அமைந்துள்ளது.
பாமக: பெரும்பான்மையாக வன்னியர்கள் உள்ள தொகுதி என்பதாலும், இம்முறை தனித்து போட்டியிடுவதாலும் பாமக கணிசமான வாக்குகளை, இத்தொகுதியில் கைப்பற்றும் விதத்தில் பணியாற்றி வருகிறது.
ஆனால், அதிமுகவைச் சேர்ந்த சி.வி.சண்முகமும் வன்னியர் என்பதால், பாமகவினரின் வாக்கு வங்கி சிதறும் வாய்ப்புள்ளது.
ராமதாஸின் சொந்த மாவட்டம், அன்புமணியின் தொலை நோக்குத் திட்டங்கள், நன்கு அறிமுகமான வேட்பாளர் போன்றவை பாமக பழனிவேலுக்கு கூடுதல் பலம் சேர்க்கும். பிற சமூகத்தினரின் ஆதரவைப் பெறுவதில் பலவீனம் உள்ளது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்: இத்தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முதல் முறையாக தேர்தல் களம் காண்கிறது. 30 ஆயிரம் முஸ்லிம் சமுதாய மக்களின் நிலையான வாக்கு வங்கியும், திமுகவின் வாக்குகளையும், பொன்முடியின் சாதனைகளையும் நம்பி, அக்கட்சி வேட்பாளர் அமீர் அப்பாஸ் நம்பிக்கையுடன் களத்தில் உள்ளார்.
ஆனால், உள்ளூர் திமுகவினரை ஓரங்கட்டி வந்த பொன்முடி, தான் தொகுதி மாறியபோதும், முக்கிய நிர்வாகிகள் ஒருவருக்கும் வாய்ப்பு கொடுக்காமல் ஏமாற்றியதால், திமுகவினர் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனால், அமீர் அப்பாஸுக்கு திமுகவின் முழுமையான ஆதரவு கிடைக்குமா என்பதில் சந்தேகம் என்கின்றனர் உடன் பிறப்புகள். இது அவருக்கு பலவீனமாக அமைந்துள்ளது.
தேமுதிக: நாயுடு சமூகத்தைச் சேர்ந்த தேமுதிக எம்எல்ஏ வெங்கடேசன் உள்ளூரைச் சேர்ந்தவர் என்றாலும், திருக்கோவிலூரை விட்டு இந்த முறை விழுப்புரத்துக்கு வந்துள்ளார். திருக்கோவிலூரை ஒருவருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டேன் என்றெல்லாம் சபதம் போட்ட இவர், முந்தைய திமுக பிரமுகர் என்பதால், பொன்முடிக்கும், இவருக்கும் ஏற்பட்ட ரகசிய உடன்பாடு தான், இப்போதைய பரஸ்பர தொகுதி மாற்றம் என்று பரவலாக பேசப்படுகிறது.
தேமுதிக, மதிமுக, கம்யூனிஸ்ட்களின் பலமில்லாத நிலையில், விடுதலைச் சிறுத்தைகளின் வாக்கையும், திமுகவினரின் மறைமுக வாக்குகளையும் நம்பியே வெங்கடேசன் களத்தில் உள்ளார். பாஜக, பகுஜன் சமாஜ், நாம் தமிழர் கட்சிகள் சொற்ப அளவில் உள்ள கட்சி ஓட்டுகளை நம்பி களத்தில் உள்ளன. விழுப்புரம் தொகுதியில் நான்குமுனைப் போட்டி என்று கூறப்பட்டாலும், அதிமுக-பாமக இடையே தான் நேரடி போட்டி நிலவி வருகிறது.
- எல்.அன்பரசு