முகப்பு
விழுப்புரம்

சாமுண்டீஸ்வரி கோயிலில் அமாவாசை வீர கும்ப வழிபாடு 

மேல்மலையனூர் அருகேயுள்ள அவலூர்பேட்டை சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு வீர கும்ப வழிபாடு ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. 

Updated On : 18 ஏப்ரல் 2018, 8:40 am IST
பகிர்:

மேல்மலையனூர் அருகேயுள்ள அவலூர்பேட்டை சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு வீர கும்ப வழிபாடு ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
 முன்னதாக, மாலை 6 மணிக்கு தேவாங்கர் குலத்தினர் கோயிலிலிருந்து பெரியகுளத்துக்குச் சென்று மூன்று கலசங்களில் புனித நீர் எடுத்து வந்து அலகுகள் வைத்து மகா தீபாராதனை செய்யப்பட்டது. கலசங்களை 3 பேர் சுமந்து வர அலகுகள் ஏந்தியோர் அம்மன், வீரபத்திர சுவாமி பதிகங்களை ஆக்ரோஷத்துடன் பாட அனைவரும் பல்ரே பல்ரே என பக்தியொலி எழுப்பினர்.
 இரவு 7 மணி அளவில் ஆலயம் வந்தடைந்த கலச நீரைக் கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர், ஸ்ரீசக்கரம் வைத்து மந்திரங்கள் சொல்லி வழிபாடு நடைபெற்றது. இரவு 9 மணிக்கு ஸ்ரீவீரபத்திர சுவாமிக்கு அலங்காரம் செய்து, சமைத்த சாதத்தை கும்பமாக கொட்டி அதன் மேல் முருங்கைக் கீரை, பல்வேறு விதமான காய்கறிகளைக் கொண்டு செய்த குழம்பு ஊற்றி அரிசி மாவால் செய்து வேக வைத்த விளக்குகளில் எண்ணை ஊற்றி தீபங்கள் ஏற்றப்பட்டன.
 இரவு 12 மணிக்கு சாதத்தில் இருந்து மூன்று உருண்டைகளை உருட்டி ஒரு பாத்திரத்தை வைத்து பெரிய குளக்கரைக்கு சென்று ஆகாசவாணிக்கு ஓர் உருண்டை, பூமாதேவிக்கு ஓர் உருண்டை, பூத பேதாளத்துக்கு ஓர் உருண்டை என வழங்கிவிட்டு, திரும்பிப் பார்க்காமல் கோயிலுக்கு வந்தடைந்து வீரபத்திரசுவாமிக்கு விபூதி அர்ச்சனை செய்து மகாதீபாராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கும்ப சாதம் பக்தர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை அமாவாசைக் குழுவினர், வீரகுமாரர்கள் செய்திருந்தனர்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.