விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற ரோந்து போலீஸார் உதவலாம்: எஸ்.பி. அறிவுரை
விபத்து நிகழ்ந்த இடத்துக்கு அவசர ஊர்தி வந்தடைய தாமதமானால், காயமடைந்தவர்களை நெடுஞ்சாலை ரோந்து போலீஸார் மீட்டு, மருத்துவமனையில் சேர்க்கலாம் என
விபத்து நிகழ்ந்த இடத்துக்கு அவசர ஊர்தி வந்தடைய தாமதமானால், காயமடைந்தவர்களை நெடுஞ்சாலை ரோந்து போலீஸார் மீட்டு, மருத்துவமனையில் சேர்க்கலாம் என மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் அறிவுறுத்தினார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் ஆய்வுப் பணி, விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவலர் அணிவகுப்பு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வரும் அனைத்து ரோந்து வாகனங்களும் கொண்டு வரப்பட்டன.
இதனை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆய்வு செய்தார். ரோந்து வாகனங்களில் ஏதேனும் பழுது ஏற்பட்டுள்ளதா, பராமரிப்பு செய்ய வேண்டுமா, ரோந்து வாகனத்துக்கு வழங்கப்பட்ட பேட்டரி விளக்குகள், எச்சரிக்கை கூம்புகள் உள்ளிட்ட உபகரணங்கள் சரியாக உள்ளனவா என்று ஆய்வு செய்தார்.
அப்போது, போலீஸாருக்கு எஸ்.பி. ஜெயக்குமார் அறிவுறுத்திப் பேசியதாவது:
ரோந்துப் பணியில் ஈடுபடும் நெடுஞ்சாலை ரோந்து போலீஸார், அதிகாரிகள் உத்தரவில்லாமல் வாகனத் தணிக்கையில் ஈடுபடக் கூடாது. பொதுமக்களிடம் பணம் வசூலிக்கக் கூடாது.
அவர்களிடம், மதிப்புமிக்க வகையில் நடந்து கொள்ள வேண்டும்.
சாலை விபத்துகளின்போது, நிகழ்விடத்துக்கு அவசர ஊர்தி வந்தடைவதற்கு தாமதமானால், காயமடைந்தவர்களை நெடுஞ்சாலை ரோந்துப் போலீஸார் மீட்டு மருத்துவமனையில் சேர்க்கலாம். அதற்கு ஏற்ப கையுறைகள் போன்ற உபகரணங்களும் ரோந்து வாகனத்தில் வைத்திருக்க வேண்டும் என்றார்.
இதையடுத்து, விக்கிரவாண்டி சுங்கச் சாவடியில் கடந்த வாரம் சங்கிலிப் பறிப்பு குற்றவாளிகளை மடக்கிப் பிடித்த நெடுஞ்சாலை ரோந்து போலீஸாரை எஸ்.பி. ஜெயக்குமார் பாராட்டி, வெகுமதி வழங்கினார்.
தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.