விழுப்புரத்தில் மகளிர் குழு உற்பத்திப் பொருள்கள் விற்பனை கண்காட்சி
விழுப்புரத்தில் மாவட்ட அளவிலான மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருள்கள் விற்பனைக் கண்காட்சி புதன்கிழமை தொடங்கப்பட்டது.
விழுப்புரத்தில் மாவட்ட அளவிலான மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருள்கள் விற்பனைக் கண்காட்சி புதன்கிழமை தொடங்கப்பட்டது.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில், மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், மாவட்டத்தில் உள்ள அனைத்து மகளிர் சுய உதவிக்குழு உற்பத்திப் பொருள்களின் விற்பனைக் கண்காட்சி தொடங்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன், விற்பனைக் கண்காட்சியைத் தொடக்கி வைத்துப் பார்வையிட்டார். இந்த கண்காட்சி மார்ச் 4-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டு வரும் மகளிர் சுய உதவிக்குழுக்களை மேம்படுத்தி அவர்கள் வாழ்வாதாரத்தை முன்னேற்றம் அடைய செய்யும் நோக்கத்துடன் இந்தக் கண்காட்சி நடத்தப்படுகிறது.
இதன் மூலம் சுய உதவிக் குழுவினரின் உற்பத்திப் பொருள்களை அறிமுகப்படுத்தி, விற்பனையை அதிகரித்து சுய உதவிக்குழுக்களுக்கு வருமானத்தை பெருக்கி அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றம் அடையச் செய்ய ஒரு சிறந்த வழிமுறையாக இது அமைகிறது.
இந்தக் கண்காட்சி விற்பனை மூலம் பொது மக்களின் அத்தியாவசிய பொருள்களான கைவினைப் பொருள்கள், பொம்மைகள், ஆயத்த ஆடைகள், பேக்குகள், பேன்ஸி பொருள்கள், மர பொம்மைகள், வயர் கூடைகள், பாசிமணி மாலைகள், மகளிர் அழகு சாதனப் பொருள்கள், தின்பண்டங்கள், சிறுதானிய வகைகள், ஊறுகாய்கள், சணல்பைகள் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்கள் குறைந்த விலையில் தரமாகப் பெறும் வகையில் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கண்காட்சியில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு, மகளிர் சுய உதவிக்குழுவினரின் உற்பத்தி பொருள்களை வாங்கி அவர்களை ஊக்கப்படுத்தி பயன்பெற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
மகளிர் திட்ட அலுவலர் சுந்தரராஜன், உதவி திட்ட அலுவலர்கள் குணசேகரன், கமல்ராஜ், முத்துபாண்டியன், சித்ரா மற்றும் மகளிர் குழுவினர் பலர் கலந்துகொண்டனர்.