முகப்பு
விழுப்புரம்

திருக்கோவிலூர் அருகே சிறுவன் கொடூரக் கொலை: குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி கட்சியினர் சாலை மறியல்

விழுப்புரம் மாவட்டம், வெள்ளம்புத்தூரில் வீடு புகுந்து சிறுவனைக் கொலை செய்து, தாய், மகள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி, திருக்கோவிலூரில் அரசியல் கட்சியினர் 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், வெள்ளம்புத்தூரில் வீடு புகுந்து சிறுவனைக் கொலை செய்து, தாய், மகள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி, திருக்கோவிலூரில் அரசியல் கட்சியினர் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 திருக்கோவிலூரை அடுத்த வெள்ளம்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மனைவி ஆராயி. கடந்த 21-ஆம் தேதி இவரது வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள் கொடூரமாக தாக்கியதில் ஆராயி மகன் தமயன் (8) உயிரிழந்தார். ஆராயி, அவரது மகள் தனம் (13)ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
 இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து, பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். ஒரு வாரமாகியும் துப்பு கிடைக்காமல் போலீஸார் திணறி வருகின்றனர்.
 இந்த நிலையில், இந்த வழக்கில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, திருக்கோவிலூர் நான்கு முனைச் சந்திப்பில் பல்வேறு கட்சியினர் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 அப்போது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலர் சிந்தனைச்செல்வன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் ஏ.வி.சரவணன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் டி.செல்வராஜ், மதிமுக நிர்வாகி கீழக்கொண்டூர் மாறன், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் பசல்முகமது ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
 கொடூரச் சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தினரை தமிழக முதல்வர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து, ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
 சிறுவனைக் கொலை செய்து, தாய், மகளை பலாத்காரம் செய்து கொடூரமாகத் தாக்கிய கும்பலைக் கைது செய்ய, தமிழக அரசு சிறப்புப் புலன் விசாரணைக் குழுவை அமைத்து, அறிவியல் பூர்வ விசாரணைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
 மறியலால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலை அறிந்து, சம்பவ இடத்துக்கு வந்த சார்-ஆட்சியர் சாருஸ்ரீ, கோரிக்கைகளை தமிழக அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்வதாகவும், மாவட்ட காவல் நிர்வாக அளவில் சிறப்பு புலன் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகள் கைது செய்யப்படுகிற வரை அந்தக் கிராமத்துக்கு அனைத்து வகையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் உறுதி அளித்தார். இதை ஏற்று மறியல் கைவிடப்பட்டது.
 
 
 
 
 
 
 
 
 
 
 

முழு கட்டுரையைப் படிக்க →