முகப்பு
விழுப்புரம்

நிதி நிறுவனத்தில் மோசடி: வாடிக்கையாளர்கள் முற்றுகை 

விழுப்புரத்தில் தனியார் நிதி நிறுவனம் ரூ.30 கோடி பணத்தை தராமல் ஏமாற்றுவதாகக் கூறி வாடிக்கையாளர்கள் புதன்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

விழுப்புரத்தில் தனியார் நிதி நிறுவனம் ரூ.30 கோடி பணத்தை தராமல் ஏமாற்றுவதாகக் கூறி வாடிக்கையாளர்கள் புதன்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 விழுப்புரம், திருச்சி சாலை, ராஜேஸ்வரி நகரில் தனியார் நிதி நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவையைச் சேர்ந்த ஏராளமானோர் மாதாந்திரச் சீட்டு திட்டத்தில் சேர்ந்தனர். ரூ.200 முதல் ரூ.50 ஆயிரம் வரை 3 ஆண்டுகள், 5 ஆண்டுகள் என பல்வேறு பிரிவுகளில் அவர்கள் தொகையை செலுத்தி வந்தனர். அந்த நிதி நிறுவனம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வாடிக்கையாளர்கள் சிலருக்கு பணத்தை கொடுத்ததாம். ஆனால், அதன்பிறகு பணம் தர வேண்டிய வாடிக்கையாளர்களுக்கு முறையாக பணத்தை வழங்காமல் இழுத்தடித்து வந்ததாம்.
 இந்த நிலையில், புதன்கிழமை பணம் தருவதாகக் கூறி, வாடிக்கையாளர்கள் அழைக்கப்பட்டனர். இதனை நம்பி 100-க்கும் மேற்பட்டோர் அந்த நிதி நிறுவனத்தில் குவிந்தனர். ஆனால், பணத்தை தரவில்லையாம். பிற்பகல் வரை பொறுத்திருந்த, வாடிக்கையாளர்கள் அந்த நிதி நிறுவனத்தை திடீரென முற்றுகையிட்டு, ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த நிறுவன முகவரையும், ஊழியரையும் சேர்த்து சிறைபிடித்தனர்.
 போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் விழுப்புரம் மேற்கு போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அந்த நிதி நிறுவனத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பணம் கட்டி ஏமாற்றம் அடைந்திருப்பதுடன், அந்நிறுவனம் சுமார் ரூ.30 கோடிக்கு மேல் திருப்பித்தர வேண்டியுள்ளது. ஆகையால், பணம் தரும் வரை இங்கேயே இருப்போம் என பாதிக்கப்பட்டோர் தெரிவித்தனர். தொடர்ந்து, அவர்கள் இரவு வரை அங்கேயே காத்திருந்தனர்.
 
 

முழு கட்டுரையைப் படிக்க →