பராமரிப்பின்றி மூடிக் கிடக்கும் சமுதாயக் கூடங்கள்!
விழுப்புரம் மாவட்டத்தில் பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட சமுதாயக் கூடங்கள் பராமரிப்பின்றி மூடிக் கிடக்கின்றன.
விழுப்புரம்பராமரிப்பின்றி மூடிக் கிடக்கும் சமுதாயக் கூடங்கள்!
விழுப்புரம் மாவட்டத்தில் பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட சமுதாயக் கூடங்கள் பராமரிப்பின்றி மூடிக் கிடக்கின்றன.
விழுப்புரம் மாவட்டத்தில் பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட சமுதாயக் கூடங்கள் பராமரிப்பின்றி மூடிக் கிடக்கின்றன. தனியார் அரங்குகளில் அரசு விழாக்களை நடத்தி பணத்தை விரயம் செய்வதைத் தவிர்த்து இதுபோன்ற அரசுக் கட்டடங்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் கிராமப்புறங்களில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ஏராளமான சமுதாயக் கூடங்கள் கட்டப்பட்டுள்ளன.
2010-ஆம் ஆண்டில் பெரும்பாலான ஊராட்சிகளில் சமுதாயக் கூடங்களை கட்டமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கினர்.
இவை ரூ.15 லட்சம் செலவில் கட்டப்பட்ட நிலையில், பெரும்பாலான இடங்களில் பயன்பாடின்றி மூடிக் கிடப்பதும், கிடங்குகளாகப் பயன்படுத்துவதும் தொடர்ந்து வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் 1099 ஊராட்சிகள் உள்ளன. இதில், சுமார் 800 ஊராட்சிகளில் இந்த சமுதாயக் கூடங்கள், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் மேற்பார்வையில் கட்டமைக்கப்பட்டு, அந்தந்த ஊராட்சியிடம் விடப்பட்டது.
இந்தக் கட்டடங்களை, சுற்றுப்புற ஊராட்சியில் உள்ள பொதுமக்கள் சுப நிகழ்ச்சிகளுக்கும், பொதுவான முகாம்கள் நடத்துவது போன்றவற்றிற்கும் பயன்படுத்திக் கொள்ள வழங்கப்பட்டது. குறைந்த வாடகையில், இவற்றை மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் சமுதாயக் கூடங்கள் கட்டப்பட்டன.
கிடங்குகளாக சமுதாயக் கூடங்கள்: ஆனால், பெரும்பாலான இடங்களில் சமுதாயக் கூடங்கள் பயன்படாமல் உள்ளன. திறப்பு விழாவுடன் பூட்டி வைக்கப்பட்ட சமுதாயக் கூடங்கள் எண்ணிக்கையில் நிறைய உள்ளன. பல கட்டடங்கள் திறக்கப்பட்டு, அரசு அலுவலகப் பொருள்களை வைக்க கிடங்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்பகுதியில், முந்தைய வழுதரெட்டி ஊராட்சிக்கு உள்பட்ட கோவிந்தசாமி லே-அவுட் பகுதியில், 2010-11-இல் ரூ.15 லட்சம் செலவில் சமுதாயக் கூடம் கட்டப்பட்டது.
விழுப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஆனந்தன் தொகுதி மேம்பாட்டு நிதியில், இந்தக் கட்டடத்தை ஊரக வளர்ச்சித் துறை மேற்பார்வையில் கட்டிமுடிக்கப்பட்டு, அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்துவைத்தார்.
திறப்பு விழாவுக்குப் பின்னர் இந்தக் கட்டடம் பயன்பாட்டுக்கு திறக்கப்படவில்லை. இலவச வேட்டிகள் போன்றவற்றை வைக்கும் கிடங்காக இந்த சமுதாயக் கூடத்தை வருவாய்த் துறையினர் பயன்படுத்தி வந்தனர்.
கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக சமுதாயக்கூடம் மூடப்பட்டு பயனற்ற நிலையில் உள்ளது. இதன் முன்பகுதியில் அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் ஜல்லி, மணலை கொட்டி வைத்து பயன்படுத்தி வருகின்றனர். இரவு நேரத்தில் சமூகவிரோத கும்பலால் மது அருந்தும் இடமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதைத் திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால், சுப நிகழ்ச்சிகளுக்கும், அரசு முகாம்களுக்கும் பயன்படுத்தலாம் என்று அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இதேபோல, முத்தாம்பாளையம் புறவழிச் சாலையில் உள்ள சமுதாயக் கூடம் ஆரம்ப காலத்தில் அந்தப் பகுதி மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது. அதுவும் தற்போது பயனின்றி மூடப்பட்டுள்ளது.
விழுப்புரத்தில் வருவாய்த் துறை தொடங்கி பல்வேறு அரசுத் துறையினரும் முகாம்கள், கூட்டங்கள், விழாக்களை தனியார் மண்டபங்கள், தனியார் கூட்ட அரங்குகளில் நடத்தி வருகின்றனர்.
அதுபோன்ற விழாக்களை சமுதாயக் கூடங்களில் நடத்தினால் அவை பராமரிக்கப்படுவதுடன் பயன்பாட்டிலும் இருக்கும்.
இதுகுறித்து ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, பல்வேறு கிராமங்களில் அரசு நிதியில் சமுதாய நலக் கூடங்கள் கட்டப்பட்டன. பின்னர், அவை அந்தந்த ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள்தான் பராமரிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.