மாநில கபடிப் போட்டி: ஈரோடு அணி வெற்றி
தமிழ்நாடு மாநில அளவிலான ஆடவர் (மிக இளையோர்) கபடி இறுதிப் போட்டியில், ஈரோடு அணி, வேலூர் அணியை வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
தமிழ்நாடு மாநில அளவிலான ஆடவர் (மிக இளையோர்) கபடி இறுதிப் போட்டியில், ஈரோடு அணி, வேலூர் அணியை வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
தமிழ்நாடு அமெச்சூர் கபடிக் கழகம், விழுப்புரம் மாவட்ட அமெச்சூர் கபடிக் கழகம் மற்றும் ஏர்வாய்பட்டினம் ஸ்ரீ விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி, மட்டிகைகுறிச்சி என்.ஆர்.சி. நண்பர்கள் கபடி கழகம் ஆகியவை இணைந்து நடத்திய
30-ஆவது, ஆடவர்களுக்கான கபடிப் போட்டி, கள்ளக்குறிச்சி அருகேயுள்ள மட்டிகைகுறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.
கடந்த வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாள்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் தமிழகத்தில் இருந்து 31 மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர்.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டியை விழுப்புரம் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் இரா.குமரகுரு எம்எல்ஏ தலைமை வகித்து தொடக்கி வைத்தார்.
மாவட்ட கபடிக் கழகத் தலைவர் அ.ராஜேசகர், தமிழ்நாடு அமெச்சூர் கபடிக் கழக துணைத் தலைவர் மதுரை எம்.ராஜா, பொதுச் செயலாளர் அ.சபியுல்லா, தமிழ்நாடு அமெச்சூர் கபடிக் கழக மாநிலத் தலைவர் கே.பி.பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட கபடிக் கழகச் செயலாளர் நா.ராமச்சந்திரன் வரவேற்றார்.
2-ஆம் நாள் போட்டியை சட்டப்பேரவை உறுப்பினர்கள் தா.உதயசூரியன், அ.பிரபு ஆகியோர் தொடக்கிவைத்தனர். மாவட்ட கபடிக் கழக துணைத் தலைவர் சி.பால்ராஜ், பொருளாளர் எம்.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதுநிலை ஆசிரியர் ஜி.குமார் வரவேற்றார்.
3-ஆம் நாள் போட்டியை ஆர்.கே.எஸ். கல்லூரித் தலைவர் க.மகுடமுடி தொடக்கி வைத்தார்.
கச்சிராயப்பாளையம் காவல் ஆய்வாளர் த.ரஜினிகாந்த் முன்னிலை வகித்தார். ஏர்வாய்பட்டினம் ஸ்ரீ விவேகானந்தா பள்ளி இயக்குநர் சங்கர் வரவேற்றார்.
போட்டி நடுவர்களாக மாவட்ட நடுவர்கள் ஜி.ஜெயக்குமார், ஜி.சிவக்குமார், கே.கோமன்தார், ஆர்.சரவணன், ஆர்.ரவிக்கரன் ஆகியோர் பங்கேற்றனர். தேசிய நடுவர் கோபால் போட்டிகளை ஒருங்கிணைத்தார்.
இறுதிப் போட்டியில் ஈரோடு மாவட்ட அணி முதலிடத்தையும், வேலூர் மாவட்ட அணி இரண்டாம் இடத்தையும், விழுப்புரம் மாவட்ட அணி மூன்றாம் இடத்தையும் பெற்றது.
முதலிடத்தைப் பெற்ற ஈரோடு மாவட்ட அணிக்கு மாநில அமெச்சூர் கபடிக் கழகத் தலைவர் கே.பி.பாண்டியன் பரிசுக் கோப்பையை வழங்கினார்.