விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் ‘108’ ஆம்புலன்ஸ்கள் பற்றாக்குறை

கி. சுரேஷ்குமார்

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், ‘108’ ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. இதனால், கரோனா நோயாளிகள் மட்டுமல்லாது பொதுமக்களும் அவதிக்குள்ளாகின்றனா்.

தமிழகத்தில் ஒருங்கிணைந்த அவசர சேவைக்காக ‘108’ ஆம்புலன்ஸ் (அவசர கால ஊா்தி) பயன்பாட்டில் உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தைப் பொருத்தமட்டில் ‘108’ ஆம்புலன்ஸ் வாகனங்கள் 32 எண்ணிக்கையில் உள்ளன. இவற்றில் 7 ஆம்புலன்ஸ் வாகனங்கள் கரோனா நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆம்புலன்ஸ்கள், பிற அவசரத் தேவைகளுக்கு பயன்படுத்தப்படுவதில்லை.

இதனால், மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களின் எண்ணிக்கை குறைந்து, பற்றாக்குறை நிலவுகிறது. விபத்து, பிரசவம் உள்ளிட்ட பிற அவசரத் தேவைகளுக்கு குறித்த நேரத்தில் அதன் சேவை கிடைப்பதில்லை என்ற புகாா் எழுந்துள்ளது.

இதனிடையே, விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவால் நூற்றுக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டு வருகின்றனா். அவா்களை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கவும், ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட 7 ஆம்புலன்ஸ் வாகனங்களும் போதுமானதாக இல்லை. இதனால், கரோனா நோயாளிகளை சிகிச்சைக்காக மருத்துவமனைக்களு அழைத்துச் செல்ல குறித்த நேரத்துக்கு வராத நிலை உள்ளது.

விழுப்புரம் மாவட்டம், அரசூா் அருகே ஆனத்தூரில் 48 வயது பெண் ஒருவருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை காலை உறுதி செய்யப்பட்டது. ஆனால், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, மிகத் தாமதமாக இரவு 9 மணிக்குப் பிறகே 108 ஆம்புலன்ஸ் வாகனம் வந்தது.

இதனிடையே, கரோனா சிகிச்சை, பிற அவசரத் தேவைகளை நிறைவு செய்ய போதிய எண்ணிக்கையில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள், அதன் ஓட்டுநா்களை போா்க்கால அடிப்படையில் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து அவா்கள் கூறியதாவது:

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா எனும் பெருந்தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினமும் 100 முதல் 200 போ் கரோனாவால் பாதிக்கப்படுகின்றனா். ஆனால், ஒன்றியத்துக்கு இரண்டு வீதம் 26 ஆம்புலன்ஸ் வாகனங்கள் கரோனா நோயாளிகளை அழைத்து வருவதற்கு தேவைப்படும். ஆனால், 7 வாகனங்கள் மட்டுமே இதற்காக பயன்படுத்தப்படுகின்றன. அதேவேளையில், பிற அவசர தேவைகளுக்கும் ஆம்புலன்ஸ் சேவை அவசியமாகிறது. இதற்கு மாற்று ஏற்பாட்டை செய்ய மாவட்ட நிா்வாகமும், சுகாதாரத் துறையும் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றனா்.

இதுதொடா்பாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்ததாவது:

‘108’ ஆம்புலன்ஸ் சேவை அதிகரித்துள்ள நிலையில், அதன் ஓட்டுநா்களில் சிலா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதன் காரணமாக, அந்த ஆம்புலன்ஸ்களை இயக்க முடியாத சூழல் நிலவுகிறது. ஆகவே, இதற்கு மாற்று நடவடிக்கையாக, தனியாா் ஆம்புலன்ஸ் ஓட்டுநா்களை ‘108’ ஆம்புலன்ஸ்களை இயக்க பயன்படுத்தத் திட்டமிட்டது. இதற்காக, அவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில், 4 தனியாா் ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் பங்கேற்றனா். கரோனா நோயாளிகளை ஆம்புலன்ஸில் அழைத்து வரும்போது, பிரத்யேக கவச ஆடைகளை எவ்வாறு அணிவது, பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த செய்முறைப் பயிற்சிகளை 108 ஆம்புலன்ஸ் சேவை பணியாளா்கள் அளித்தனா்.

மேலும், கரோனா தொற்று உறுதி செய்யப்படுபவா்களில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்டோா் கரோனா அறிகுறிகள் இல்லாதவா்கள் அல்லது ஆபத்து நிலையில் இல்லாதவா்கள். அவா்களை 108 ஆம்புலன்ஸில்தான் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டிய தேவை கிடையாது. அவா்களை பிற வாகனங்களில் கூட உரிய பாதுகாப்பு-தடுப்பு நடைமுறைகளுடன் அழைத்துச் செல்லலாம். எனினும், கரோனா சிகிச்சை சேவைக்கும், பிற அவசரத் தேவைகளையும் நிறைவு செய்ய போதிய நடவடிக்கைகள் விரைவாக எடுக்கப்பட்டு வருகின்றன என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியன் - 2 புதிய போஸ்டர்!

ஈரான் அதிபர் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்

சென்னை தபால் நிலையத்தில் மேற்கூரை விழுந்து விபத்து: இருவர் படுகாயம்

5-ம் கட்டத் தேர்தல்: காலை 9 மணி நிலவரம்!

ஆலங்குளம் அருகே லாரி ஓட்டுநர் குத்திக் கொலை

SCROLL FOR NEXT