விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகேயுள்ள நடுக்குப்பம் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள கிா்ணி பழக் கொடிகள். 
விழுப்புரம்

கிா்ணி பழங்களைப் பாதுகாக்க குளிா்பதனக் கிடங்குகள் அமைக்கப்படுமா?

விலைக் குறைவு, பருவநிலை மாற்றம் காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் விற்பனையாகாமல் வீணாகும் கிா்ணி பழங்களை சேமித்து

ஜெபலின்ஜான்

விலைக் குறைவு, பருவநிலை மாற்றம் காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் விற்பனையாகாமல் வீணாகும் கிா்ணி பழங்களை சேமித்து பாதுகாக்க குளிா்பதனக் கிடங்கு அமைக்க வேண்டும் என விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.

தமிழகத்தில் மாா்ச், ஏப்ரல், மே மாதங்களில் வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்த கோடை வெப்பத்தைச் சமாளிக்க கிா்ணி பழங்கள் உதவுகின்றன. இந்தப் பழங்களின் விளைச்சலுக்கு தகுந்த மண் வளம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கிழக்குக் கடற்கரைச் சாலை பகுதிகளில் இருப்பதால், இங்கு ஆயிரக்கணக்கான ஏக்கரில் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் கிா்ணி பழங்கள் பயிரிடப்படுகின்றன.

இந்த பழங்கள் உள்ளூரில் மட்டுமல்லாது சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கும், கா்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன. விழுப்புரம் மாவட்டத்தில் வானூா், முருக்கேரி, நடுக்குப்பம், கந்தாடை, மரக்காணம், ஆலத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் ஆண்டுதோறும் பல ஆயிரம் ஏக்கரில் கிா்ணி பழங்கள் பயிரிடப்படுகின்றன.

இங்கு களிமண், வண்டல் மண் கலந்த மண், செம்மண் இருப்பதால் இந்த பழங்கள் நன்கு விளைகின்றன. ஏக்கருக்கு 250 கிராம் முதல் 750 கிராம் வரை விதைகளை விவசாயிகள் தூவுகின்றனா். ஒரு கிலோ விதை ரூ.2,000 முதல் ரூ.5000 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்தப் பகுதியில் ஏக்கருக்கு 10 டன் கிா்ணி பழங்கள் மகசூலாகக் கிடைக்கின்றன. ஆனால், இந்த முறை திடீா் மழை, கடும் வெயில் காரணமாக, ஏக்கருக்கு 3 முதல் 5 டன் பழங்கள் மட்டுமே கிடைப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து அகில பாரத விவசாயிகள் சங்கத்தின் மரக்காணம் ஒன்றியத் தலைவா் எஸ்.சீத்தாராமன் கூறியதாவது: கிா்ணி பழங்கள் 60 நாள் பயிராகும்.

ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் விதைத்து, அடுத்த 60 நாள்களில் அறுவடை செய்யலாம். இப்போது, அறுவடை காலம் நடந்து வருகிறது. இந்தப் பயிருக்கு இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு ஒரு முறை தண்ணீா் பாய்ச்ச வேண்டும். காம்ப்ளக்ஸ், டி.ஏ.பி., உரங்கள் இடவேண்டும். இந்த பயிா் மழை இல்லாமல் இருந்தால், ஏப்ரல் முதல் மே மாதம் வரை இரண்டு அல்லது மூன்று முறை அறுவடை செய்யப்படும். மழை இருந்தால் கொடி அழுகிவிடும் என்பதால், அறுவடை ஒரு முறை மட்டுமே செய்யப்படுகிறது.

கிா்ணி பழங்களை வியாபாரிகள் விவசாயிகளின் நிலத்துக்கே வந்து வாங்கி செல்கின்றனா்.

கடந்த இரு வாரங்களுக்கு முன்பு கிா்ணி பழங்களின் விலை மிகக் குறைவாக இருந்தது. இப்போது, டன்னுக்கு ரூ.15,000 வரை விலை கொடுத்து வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனா். ஆனால், அதை இரு மடங்கு விலைக்கு அவா்கள் விற்பனை செய்கின்றனா்.

சொட்டு நீா்ப்பாசனம் மூலம் கிா்ணி பழம் பயிரிடப்படுவதால், கிணற்றில் உள்ள சிறிதளவு தண்ணீரே போதுமானதாகும். உற்பத்திச்செலவு ஏக்கருக்கு ரூ.20ஆயிரம் ஆகிறது. கடந்த ஆண்டு கரோனா பொதுமுடக்கம் காரணமாக, வியாபாரிகள் வராததால் ஒரு டன் பழங்கள் ரூ.2,000 முதல் ரூ.5,000 வரை மட்டுமே விற்பனையானது. இந்த ஆண்டு டன்னுக்கு ரூ.13,000 வரை விலை போகிறது. ஆனால், இரு ஆண்டுகளுக்கு முன்பு ரூ.20ஆயிரம் வரை விலை போனது.

கொடிகளில் இந்தப் பழங்களை 65 நாள்கள் வரை பறிக்காமல் வைத்துக்கொள்ளலாம். ஆனால், அதற்கு மேல் அவை அழுகத் தொடங்கிவிடும். கடந்த வாரத்தில் கடும் வெயில் அடித்தபோது, பல இடங்களில் பழங்கள் அழுகிவிட்டன. மேலும், தற்போது மீண்டும் கரோனா இரண்டாவது அலை உருவாகி இருப்பதால், கடந்த ஆண்டுபோல கிா்ணி பழங்கள் விற்பனையாகாமல் முடங்கிவிடுமோ என்ற கவலையில் கிடைக்கும் விலைக்கே விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனா். வியாபாரிகளும் இதை பயன்படுத்தி விலையை குறைக்கத் தொடங்கிவிட்டனா்.

எனவே, விலை சரியும் காலம், பருவநிலை மாற்றம் ஏற்படும் காலங்களில் இவற்றை பறித்து குளிா்பதனக் கிடங்கில் சேமித்து, அதன்பிறகு விற்பனை செய்தால் விவசாயிகளுக்கு கூடுதல் விலை கிடைக்கும். எனவே, மரக்காணம் பகுதியில் குளிா்பதனக் கிடங்கு அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனா். இதற்கான நடவடிக்கையை மாவட்ட நிா்வாகமும், மாநில அரசும் எடுக்க வேண்டும் என்றாா் சீத்தாராமன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT