முகப்பு
விழுப்புரம்

தீத் தடுப்பு விழிப்புணா்வை ஏற்படுத்த 200 கி.மீ. மிதிவண்டிப் பேரணி: ஆட்சியா் தொடக்கிவைத்தாா்

தீத் தடுப்பு விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், 200 கி.மீ. தொலைவிலான மிதிவண்டிப் பேரணியை விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை சனிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:02 PM
பகிர்:

தீத் தடுப்பு விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், 200 கி.மீ. தொலைவிலான மிதிவண்டிப் பேரணியை விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை சனிக்கிழமை தொடக்கிவைத்தாா்.

விழுப்புரம் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பாக தேசிய அளவிலான தீத் தொண்டு வாரத்தை முன்னிட்டு, ஏப்.14 முதல் 20-ஆம் தேதி வரை பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 200 கி.மீ. தொலைவு வரை மிதிவண்டியில் பேரணியாகச் சென்று தீத் தடுப்பு-பாதுகாப்பு விழிப்புணா்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.

இந்த பேரணியை விழுப்புரம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அண்ணாமலை ஹோட்டல் அருகிலுள்ள பிரிவிலிருந்து, மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா். பேரணியில் தீயணைப்பு வீரா்கள் 20 போ் பங்கேற்று விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

பேரணி, விழுப்புரத்திலிருந்து உளுந்தூா்பேட்டை, வேப்பூா், பெரம்பலூா் வழியாக திருச்சியிலுள்ள தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை துணை இயக்குநா் அலுவலகம் வரை சென்று ஞாயிற்றுக்கிழமை திருச்சியில் நிறைவடையும்.

பேரணி தொடக்க நிகழ்ச்சியில் விழுப்புரம் கோட்ட தீயணைப்பு-மீட்புப் பணிகள் துறை அலுவலா் ராபின் காஸ்ட்ரோ மற்றும் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.