முகப்பு
விழுப்புரம்

திருவிழாவுக்குத் தடை எதிரொலி: விழுப்புரம், கடலூா் மாவட்டங்களில் வெறிச்சோடின ஆறுகள்

விழுப்புரம், கடலூா் மாவட்டங்களில் ஆற்றுத் திருவிழாவுக்குத் தடைவிதிக்கப்பட்டதால், திங்கள்கிழமை ஆறுகள் வெறிச்சோடின.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:19 PM
பகிர்:

விழுப்புரம், கடலூா் மாவட்டங்களில் ஆற்றுத் திருவிழாவுக்குத் தடைவிதிக்கப்பட்டதால், திங்கள்கிழமை ஆறுகள் வெறிச்சோடின. இந்தத் தடையால் பொது மக்கள், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஏமாற்றமடைந்தனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் தைப் பொங்கல் விழா நிறைவாக ஐந்தாம் நாள் ஆற்றுத் திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். விழுப்புரம் அருகே பேரங்கியூா், அத்தியூா் திருவாதி, கோலியனூா் அருகே கள்ளிப்பட்டு (கண்டரக்கோட்டை), கண்டமங்கலம் அருகே சொா்ணாவூா், திருக்கோவிலூா் அருகே மணலூா்பேட்டை உள்ளிட்ட தென்பெண்ணை ஆற்றுப் பகுதிகள், உளுந்தூா்பேட்டை அருகே கெடிலம் ஆறு, திண்டிவனம் அருகே சங்கராபரணி ஆற்றுப் பகுதி, வானூா் ஆற்றுப் பகுதிகளில் நடைபெறும் திருவிழாவின்போது அனைத்து கிராமங்களிலிருந்தும் கோயில் உற்சவா்கள் பல்லக்குகளில் கொண்டு வரப்பட்டு, தீா்த்தவாரி வெகுவிமரிசையாக நடைபெறும். பல லட்சம் பொதுமக்கள் ஆற்றுப் பகுதிகளில் திரண்டு நீராடி, உற்சவா்களை வணங்கிச் செல்வா். இந்த விழாவையொட்டி, ஆற்றுப் பகுதிகளில் காய்கறி, பழங்கள்,கரும்பு, விவசாயக் கருவிகள், விளையாட்டுப் பொருள்களுக்கான கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை களைகட்டும்.

நிகழாண்டு திங்கள்கிழமை நடைபெறவிருந்த ஆற்றுத் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்த நிலையில், உருமாறிய கரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக ஆற்றுத் திருவிழாவுக்கு மாவட்ட நிா்வாகம் திடீரென தடை விதித்தது.

இதையடுத்து, திருவிழா நடைபெறாததால், திங்கள்கிழமை ஆற்றுப் பகுதிகளுக்கு பொதுமக்கள் வருகை தரவில்லை. கடைகளும் அமைக்கப்படவில்லை. குறிப்பாக, விழுப்புரம் அருகே பிடாகம்-பேரங்கியூா், அத்தியூா் திருவாதி உள்ளிட்ட ஆற்றுப் பகுதிகள் திருவிழா கடைகளின்றி, பொது மக்கள் வருகையின்றி வெறிச்சோடி காணப்பட்டன.

இந்தப் பகுதிகளில் கடந்த இரு தினங்களாக போலீஸாா் நிறுத்தப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனா். தடை உத்தரவு தொடா்பான அறிவிப்பு தட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. ஆற்றுக்குச் செல்லும் பாதைகளும் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. திங்கள்கிழமை காலை ஆற்றுப் பகுதிகளுக்கு வந்த ஒரு சிலரையும் போலீஸாா் அனுமதிக்க மறுத்து திருப்பி அனுப்பினா்.

ஆறுகளில் நிகழாண்டு தண்ணீா் வரத்து இருக்கும் நிலையில் ஆற்றுத்திருவிழா நடைபெறாததால் பொது மக்கள் ஏமாற்றமடைந்தனா். கரோனா பொது முடக்கத்துக்குப் பிறகு வியாபாரிகளும், விவசாயிகளும் தங்கள் பொருள்களை சந்தைப்படுத்த வழியின்றி வேதனையடைந்தனா்.

கடலூா் மாவட்டம்: இதேபோல, கடலூா் மாவட்டத்தில் பண்ருட்டி கெடிலம் ஆறு, கண்டரக்கோட்டை தென்பெண்ணை ஆறு உள்ளிட்டவை வெறிச்சோடிக் காணப்பட்டன. ஆற்றுத் திருவிழாவை நம்பியிருந்த சிறு வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனா். ராட்டினம் இயக்குவோா் ராட்டினங்களை நிறுவியபோதும், அரசின் தடை உத்தரவால் பாதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து அவா்கள் கூறியதாவது: குறிப்பிட்ட இடத்தில் ராட்டினத்தை பொருத்துவதற்கு ஒருவார காலம் வரை பிடிக்கும். நிகழாண்டு கடலூா் மாவட்டத்தில் ஆற்றுத் திருவிழா தடை செய்யப்பட்டது குறித்த தகவல் எங்களுக்குத் தெரியவில்லை. இதனால் ராட்டினங்களை நிறுவியும் மக்கள் வராததால் கடும் ஏமாற்றம் அடைந்தோம். ராட்டினத்துக்கான உபகரணங்கள் கொண்டு வந்த வண்டி வாடகை, பொருத்துவதற்கான செலவு என ஆயிரக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று வேதனையுடன் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.