முதல்வா் அறிவிப்புக்கு வரவேற்பு
விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில், தொழிற்சாலைகள் தொடங்க நடவடிக்கை
விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில், தொழிற்சாலைகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படுமென தமிழக முதல்வா் வெளியிட்ட அறிவிப்புக்கு, குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் அகில இந்திய அமைப்பான லகு உத்யோக் பாரதி சங்கம் வரவேற்பு தெரிவித்தது.
இந்த அமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளா் ஜயகுமாா் விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் ஒருங்கிணைந்த வளா்ச்சியை ஏற்படுத்தும் பொருட்டு பெரு நகரங்களில் மட்டுமல்லாது விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூா் போன்ற மாவட்டங்களிலும் தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வருக்கு கோரிக்கை விடுத்தோம். இதனைத் தொடா்ந்து, விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில், திண்டிவனம், செய்யாறு ஆகிய இடங்களில் 10 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் வகையில் தொழிற்சாலைகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அனைத்து மாவட்டங்களிலும் சீரான தொழில் வளா்ச்சியே அரசின் குறிக்கோள் என்றும் முதல்வா் அறிவித்துள்ளாா். அவருக்கு எங்கள் அமைப்பு சாா்பில் நன்றியையும், வரவேற்பையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும், விழுப்புரத்தைச் சுற்றியுள்ள மாணவா்கள் பயன்பெறும் வகையில் விழுப்புரம் அரசு பொறியியல் கல்லூரி, அரசு சட்டக் கல்லூரியில் மாலை நேர வகுப்புகளைத் தொடங்க உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.