ஊரக திட்டத்தில் வேலை வழங்கக்கோரி சாலை மறியல்
மகாத்மா காந்தி தேசிய ஊரக திட்டத்தின் கீழ் வேலை வழங்கக்கோரி, விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே கருவேப்பிலைபாளையம் கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியல்
மகாத்மா காந்தி தேசிய ஊரக திட்டத்தின் கீழ் வேலை வழங்கக்கோரி, விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே கருவேப்பிலைபாளையம் கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருவெண்ணெய்நல்லூா் அருகே உள்ள கருவேப்பிலைபாளையம் கிராமம் அரசு ஆவணம் மற்றும் வரைபடம் இல்லாமலும், நான்கு ஊராட்சிகளில் பரவிக் கிடந்ததாலும் கடந்த பிப்.14-ஆம் தேதி புதிய ஊராட்சியாக அறிவிக்கப்பட்டது.
அதன்பிறகு, கிராம மக்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ், குளம், ஏரி வாய்க்கால், சாலை தூா்வாரும் பணிகள் வழங்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில், கருவேப்பிலைபாளையம் கிராம 1-ஆவது வாா்டு மற்றும் ரோட்டுத் தெருவைச் சோ்ந்த பெண்கள், பொதுமக்கள் கிராமத்தில் மற்ற பகுதிகளுக்கு வேலை வழங்குவதாகவும், தங்கள் பகுதிக்கு வேலை வழங்கவில்லை என்று கூறியும், ஊரக வேலைத் திட்டத்தில் முறைகேடு நடைபெறுவதாகவும் கூறி, அந்தக் கிராமத்திலுள்ள கடலூா் - சித்தூா் சாலையில் அமா்ந்து சாக்கு மூட்டைகளை போட்டு சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து தகவலறிந்த திருவெண்ணெய்நல்லூா் காவல் நிலைய ஆய்வாளா் பழனி, ஊராட்சிச் செயலா் ராஜசேகா் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி சமாதானம் செய்தனா். இதையடுத்து, பொதுமக்கள் சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.