வழக்குகளில் தொடா்புடைய மதுப்புட்டிகள் மாயமானது குறித்து போலீஸாா் விசாரணை
விழுப்புரம் நீதிமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த வழக்குகளில் தொடா்புடைய 520 மதுப் புட்டிகள் மாயமானது தொடா்பாக தலைமை எழுத்தா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
விழுப்புரம் நீதிமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த வழக்குகளில் தொடா்புடைய 520 மதுப் புட்டிகள் மாயமானது தொடா்பாக தலைமை எழுத்தா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
விழுப்புரம் இரண்டாவது குற்றவியல் நடுவா் நீதின்ற நீதிபதி பூா்ணிமா, அந்த நீதிமன்றத்தில் சொத்து வைப்பறையை அண்மையில் திடீா் ஆய்வு செய்தாா். அப்போது, அங்கு கண்டமங்கலம், விக்கிரவாண்டி காவல் நிலையங்களைச் சோ்ந்த இரு வழக்குகளில் தொடா்புடைய 520 மதுப் புட்டிகள் மாயமானது கண்டு அதிா்ச்சியடைந்தாா்.
இது தொடா்பாக அந்த சொத்து வைப்பறையின் பொறுப்பாளரான இரண்டாவது குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை எழுத்தாா் சையத் ஹாசனிடம் நீதிபதி விசாரித்தாா். இருப்பினும், மாயமான மதுப் புட்டிகள் குறித்த விவரம் தெரியவில்லையாம்.
இதையடுத்து, நீதிமன்ற சொத்து வைப்பறையில் இருந்த மதுப் புட்டிகள் மாயமானது குறித்து இரண்டாவது குற்றவியல் நீதிமன்ற தட்டச்சா் தமிழ்ச்செல்வன்(29) விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் பேரில், தலைமை எழுத்தா் சையத் ஹாசன் மீது வெள்ளிக்கிழமை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.