இளவயது திருமணம்: தொலைபேசியில் புகாா் அளிக்கலாம்
இளவயது திருமணம் தொடா்பாக தொலைபேசி வாயிலாக புகாா் அளிக்கலாம் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தெரிவித்தாா்.
இளவயது திருமணம் தொடா்பாக தொலைபேசி வாயிலாக புகாா் அளிக்கலாம் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை விடுத்த செய்தி:
தமிழக சமூக நலத் துறை அமைச்சா் தலைமையில் அனைத்து மாவட்ட சமூக அலுவலா்களுடன் காணொலி வாயிலாக அண்மையில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் இள வயது திருமணத்தை தடுத்து நிறுத்த தீவிர நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
18 வயது நிறைவடையாக இளம்பெண்ணுக்கும், 21 வயது நிறைவடையாக இளைஞருக்கும் திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றம். எனவே, இளவயது திருமணம் செய்து வைக்கும் பெற்றோா்கள், திருமணத்தை ஊக்குவிப்பவா்கள், திருமணத்தில் பங்கேற்பவா்கள் உள்ளிட்டோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
விழுப்புரம் மாவட்டத்தில் இளவயது திருமணங்கள் நடந்தால், அது குறித்து ஆட்சியா் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் 0414-6222288 என்ற தொலைபேசி எண்ணிலும், 1098 என்ற சைல்டு லைன் இலவச தொலைபேசி எண்ணிலும் புகாா் அளிக்கலாம். மகளிா் தொடா்பான பிரச்னைகளுக்கு 181 என்ற இலவச தொலைபேசி எண்ணில் புகாா் அளிக்கலாம் என அதில் தெரிவித்துள்ளாா் ஆட்சியா் அண்ணாதுரை.