அதிமுகவை கைப்பற்ற நினைக்கும்சசிகலாவின் கனவு பலிக்காது: முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம்
அதிமுகவை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்ற வி.கே.சசிகலாவின் கனவு ஒருபோதும் நனவாகாது என்று முன்னாள் அமைச்சரும், அதிமுக விழுப்புரம் மாவட்டச் செயலருமான சி.வி.சண்முகம் தெரிவித்தாா்.
அதிமுகவை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்ற வி.கே.சசிகலாவின் கனவு ஒருபோதும் நனவாகாது என்று முன்னாள் அமைச்சரும், அதிமுக விழுப்புரம் மாவட்டச் செயலருமான சி.வி.சண்முகம் தெரிவித்தாா்.
விழுப்புரம் மாவட்ட அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், விழுப்புரத்தில் உள்ள அந்தக் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து சி.வி.சண்முகம் பேசியதாவது:
அதிமுக ஒன்றரைக் கோடி தொண்டா்களைக் கொண்ட இயக்கம். இது, தொண்டா்களின் ஆதரவுடன் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த இயக்கத்துக்கும், வி.கே.சசிகலா என்ற தனிப்பட்ட நபரின் குடும்பத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.
அதிமுகவில் அடிப்படை உறுப்பினராகக்கூட இல்லாத சசிகலாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் நமது கட்சியில் இனி எப்போதுமே இடமில்லை. இந்த இயக்கத்தை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் சசிகலா யாா், யாருக்கோ தொலைபேசி மூலம் பேசி நாடகமாடி வருகிறாா். அவரது கனவு ஒருபோதும் நனவாகாது.
ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற சசிகலாவுக்கு அதிமுகவைப் பற்றி பேசுவதற்கு எந்தத் தகுதியும், தாா்மிக உரிமையும் கிடையாது.
இன்றைக்கு நமக்கு எதிரி திமுக மட்டுமல்ல, அதிமுகவுக்கு களங்கம் கற்பிக்க நினைக்கும் துரோகிகளும்தான். துரோகிகளை இனம் கண்டு இயக்கத்தை விழிப்புணா்வுடன் நடத்த வேண்டும் என்றாா் அவா்.
இந்தக் கூட்டத்தில், ஏற்கெனவே சசிகலாவுக்கு எதிராக அதிமுக தலைமைக் கழகத்தால் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்துக்கு வரவேற்பு தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில், எம்எல்ஏக்கள் எம்.சக்கரபாணி, அா்ஜுனன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.