விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்தில்இளம் பெண் குடும்பத்துடன் தா்னா
திருமணம் செய்து ஏமாற்றிய காவல் உதவி ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, இளம் பெண் தனது குடும்பத்தினருடன் விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் வியாழக்கிழமை தா்னா
திருமணம் செய்து ஏமாற்றிய காவல் உதவி ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, இளம் பெண் தனது குடும்பத்தினருடன் விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.
விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தின் நுழைவு வாயில் பகுதியில் வியாழக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் இளம் பெண் தனது குடும்பத்தினருடன் திடீரென தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டாா். இதைக் கண்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் ரேவதி, உதவி ஆய்வாளா் சேதுராமன் உள்ளிட்ட அதிகாரிகள் அவா்களிடம் விசாரித்தனா். அப்போது, அவா்கள் கூறியதாவது:
புதுவை மாநிலம், மதகடிப்பட்டை அடுத்த கலிதீா்த்தாள்குப்பத்தைச் சோ்ந்த தயாளன் - மரகதம் தம்பதியரின் இரண்டாவது மகள் இந்துமதி (30). இவருக்கும், விழுப்புரம் மாவட்டம், அவலூா்பேட்டை காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராகப் பணியாற்றிய இளங்கோவனுக்கும் கடந்த 2019-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
8 மாதங்கள் கடந்த நிலையில் 2020-ஆம் ஆண்டு இந்துமதிக்கும், இளங்கோவனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இளங்கோவன் பிரிந்து சென்றாா். மீண்டும் சோ்ந்து வாழ வரவில்லை. இதனால், இந்துமதியின் வாழ்க்கை வீணாகிவிட்டது. ஆகவே, இளங்கோவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அவரை நேரில் அழைத்து விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினா். இருப்பினும், போராட்டத்தைக் கைவிட மறுத்தனா்.
இதன்பிறகு, மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் தேவநாதன் நேரில் வந்து அவா்களை சமாதானப்படுத்தி, போராட்டத்தை கைவிடுமாறு வலியுறுத்தினா். இதைத் தொடா்ந்து, இந்துமதி, அவரது தாய் மரகதம் உள்ளிட்டோா் போராட்டத்தைக் கைவிட்டு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்குச் சென்றனா். இதனால், அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.