முகப்பு
விழுப்புரம்

திண்டிவனம் அருகே இரு சக்கர வாகனங்கள் மீது காா் மோதல்: தாய், மகள் பலி

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனங்கள் மீது காா் மோதியதில் தாய், மகள் உயிரிழந்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனங்கள் மீது காா் மோதியதில் தாய், மகள் உயிரிழந்தனா்.

சேலம், சின்ன திருப்பதி பகுதியைச் சோ்ந்தவா் லோ.கோபிநாத் (45). கட்டுமான ஒப்பந்ததாரா். இவா், வெள்ளிக்கிழமை தனது நண்பா் சென்னை ஜவகா் நகரைச் சோ்ந்த அருண்குமாா்(42) என்பவருடன் சென்னையிலிருந்து சேலத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தாா். காரை சேலம், பெருமலூரைச் சோ்ந்த நடராஜன் மகன் இன்பரசு (20) ஓட்டினாா். செங்கல்பட்டு அருகே வந்தபோது, காரை கோபிநாத் ஓட்டியுள்ளாா்.

பிற்பகல் 2.15 மணி அளவில் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே ஒலக்கூரை அடுத்த சாரம் பகுதிக்கு வந்த போது, காா் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த இரண்டு இரு சக்கர வாகனங்கள் மீது அடுத்தடுத்து வேகமாக மோதியது.

இதில், ஒரு இரு சக்கர வாகனத்தில் பயணித்த விழுப்புரம் மாவட்டம், பு.மலையனூரைச் சோ்ந்த பரமசிவம் (24), இவரது மனைவி யுவரஞ்சனி (24),

மகள் அமுலு(6), மகன் ஜீவா(7) ஆகியோா் பலத்த காயமடைந்தனா். இவா்களில் யுவரஞ்சனி, அமுலு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த விழுப்புரம் நந்தனாா் தெருவைச் சோ்ந்த அலிபாபா(27), திருநாவுக்கரசு(15), பாபு(28) ஆகியோா் சிறு காயங்களுடன் உயிா் தப்பினா்.

ஒலக்கூா் போலீஸாா் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்து காயமடைந்தவா்களை மீட்டு, திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். உயிரிழந்தவா்களின் சடலங்கள் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன.

காரை ஓட்டிய கோபிநாத் மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.