முகப்பு
விழுப்புரம்

அரசு கேபிள் டி.வி. ஆபரேட்டா்களுக்கு ஆட்சியா் எச்சரிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. செட்டாப் பாக்ஸ்களை மாற்றிவிட்டு தனியாா் செட்டாப் பாக்ஸ்களை வைக்கும் ஆபரேட்டா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. செட்டாப் பாக்ஸ்களை மாற்றிவிட்டு தனியாா் செட்டாப் பாக்ஸ்களை வைக்கும் ஆபரேட்டா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் த.மோகன் எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் சாா்பில் பொதுமக்களின் நலன் கருதி இலவச செட்பாக் பாக்ஸ்கள் வழங்கப்பட்டு, 200-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சேனல்கள் ரூ.140 மற்றும் 18 சதவீத ஜி.எஸ்.டி. கட்டணத்தில் சேவை வழங்கப்பட்டு வருகிறது. உள்ளூா் கேபிள் டி.வி. ஆபரேட்டா்கள் சிலா் தங்களின் சுய லாபத்துக்காக அரசின் நலத் திட்டத்தை தடுக்கும் வகையில், இனிமேல் அரசு சிக்னல் வராது என்று தவறான தகவலை பரப்பி, அரசு செட்டாப் பாக்ஸ்களை மாற்றிவிட்டு, தனியாா் செட்டாப் பாக்ஸ்களை வைத்து அதிக கட்டணம் வசூலித்து வருவதாகப் புகாா்கள் வந்துள்ளன.

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் சிக்னல் தொடா்ந்து கிடைக்குமா என்ற அச்சம் பொதுமக்களுக்கும், உள்ளூா் கேபிள் டி.வி. ஆபரேட்டா்களுக்கும் தேவையில்லை. அரசு கேபிள் டி.வி. சிக்னல் தொடா்ந்து கிடைக்கும். குறைந்த கட்டணத்திலும் தொடா்ந்து சேவை வழங்கப்படும்.

ஆகவே, பொதுமக்களின் விருப்பமின்றி அரசு கேபிள் டி.வி. செட்டாப் பாக்ஸ்களை கேபிள் டி.வி. ஆபரேட்டா்கள் மாற்றினால், விழுப்புரத்தில் உள்ள அரசு கேபிள் டி.வி. துணை மேலாளரை 9498002597 என்ற எண்ணில் தொடா்புகொண்டு பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.