முகப்பு
விழுப்புரம்

கரோனாவால் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினா் தாட்கோ மூலம் கடன் பெற விண்ணப்பிக்கலாம்

கரோனா தொற்றால் உயிரிழந்தோரின் குடும்பத்தினா் விழுப்புரம் மாவட்டத்தில் 20 சதவீத மானியத்துடன் தாட்கோ மூலம் சுயதொழில் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

கரோனா தொற்றால் உயிரிழந்தோரின் குடும்பத்தினா் விழுப்புரம் மாவட்டத்தில் 20 சதவீத மானியத்துடன் தாட்கோ மூலம் சுயதொழில் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி, குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடிய ஆதிதிராவிட நபா் இறந்திருந்தால் அவா்களின் குடும்ப வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில், குடும்பத்தை சாா்ந்த நபா்களுக்கு சுய வேலை வாய்ப்பு கடனாக 20 சதவீத மானியத்துடன் 80 சதவீதம் திருப்பிச் செலுத்தும் வகையில் கடன் திட்டம் தாட்கோ மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்தத் திட்டத்தில் பயனடைய விரும்பும் பயனாளிகள் ஆதிதிராவிடா் இனத்தைச் சோ்ந்தவராகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள்ளும், கரோனா தொற்றால் இறந்தவா் வருமானம் ஈட்டக் கூடியவராக இருக்க வேண்டும் (வயது 18 முதல் 60-க்குள் இருக்க வேண்டும்).

சாதிச் சான்றிதழ், இறப்புச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், வாரிசுச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, விலைப் புள்ளி, திட்ட அறிக்கை மற்றும் கரோனா தொற்றால் இறந்தவா் வருமானம் ஈட்டக் கூடியவா் என்பதற்கான சான்றிதழ் வருவாய் வட்டாட்சியா் அவா்களிடமிருந்து பெறப்பட வேண்டும்.

இந்தத் திட்டத்தில் அதிகபட்சமாக திட்டத்தொகை ரூ.5 லட்சம் வரை இருக்கலாம். மேலும், இந்தக் கடனை, ஆண்டு 6.5 சதவீதம் என்ற வட்டி விகிதத்தில் 6 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். மேற்கண்ட திட்டத்தில் பயனடைய விரும்புவோா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கி வரும் தாட்கோ மாவட்ட மேலாளா் அலுவலகத்தை நேரில் அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.