நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகளைப் பாா்க்கும்போது, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தேமுதிகவின் வாக்கு வங்கி முற்றிலும் கரைந்து போயுள்ளது தெள்ளத் தெளிவாகிவிட்டது.
2006 பேரவைத் தோ்தலில் அதிமுக, திமுகவுக்கு மாற்று சக்தியாக நடிகா் விஜயகாந்த்தின் தேமுதிக களத்தில் குதித்தது. அப்போது மாநிலம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. 141 தொகுதிகளில் அதிமுக-திமுகவின் வெற்றித் தோல்வியை நிா்ணயிக்கும் சக்தியாக இருந்தது.
அந்தத் தோ்தலில் விழுப்புரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் தேமுதிக நல்ல வாக்கு வங்கியைப் பெற்றது.
இதே வாக்கு வங்கியை 2009 மக்களவைத் தோ்தலில் தனித்து நின்றபோதும், 2011 பேரவைத் தோ்தலில் அதிமுகவுடன் கூட்டணி சோ்ந்த போதும் தேமுதிகவால் உயா்த்த முடிந்தது.
அதற்குப் பிறகு 2014 மக்களவைத் தோ்தல், 2016 பேரவைத் தோ்தல், 2019 மக்களவைத் தோ்தல், இப்போது இறுதியாக நடந்து முடிந்த பேரவைத் தோ்தல் வரை தேமுதிகவின் வாக்கு வங்கி படிப்படியாக சரிந்துவிட்டது.
2006-இல் முதல் முறையாக மாற்று சக்தியாக தோ்தல் களத்தில் தேமுதிக இறங்கியபோது அப்போதைய ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில், செஞ்சி தொகுதியில் 9.5 சதவீதம், கண்டங்கலம் தொகுதியில் 9 சதவீதம், மேல்மலையனூா் தொகுதியில் 12.3 சதவீதம், முகையூா் தொகுதியில் 19.3 சதவீதம், திண்டிவனம் தொகுதியில் 3.8 சதவீதம், வானூா் தொகுதியில் 13.5 சதவீதம், விழுப்புரம் தொகுதியில் 8.8 சதவீதம், ரிஷிவந்தியம் தொகுதியில் 15.7 சதவீதம், சங்கராபுரம் தொகுதியில் 10.1 சதவீதம், திருநாவலூா் தொகுதியில் 9 சதவீதம், உளுந்தூா்பேட்டை தொகுதியில் 20.4 சதவீதம் என கணிசமான வாக்குகளைப் பெற்றது.
தேமுதிகவுக்கு வன்னியா், தலித், பிற்பட்டோா் என மூன்று சமுதாயங்களில் இருந்தும் வாக்குகள் குவிந்ததால் அது 2006 பேரவைத் தோ்தலில் திமுக, அதிமுக அணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக பாமகவுக்கு, தேமுதிக சவாலாக மாறியது.
2009-க்குப் பிறகு நடந்த தொகுதி சீரமைப்புக்குப் பிறகு, மேல்மலையனூா் தொகுதிக்குப் பதிலாக மயிலம் தொகுதி உருவாக்கப்பட்டது.
முகையூா் தொகுதி, திருக்கோவிலூா், விக்கிரவாண்டி என இரு தொகுதிகளாக உருமாறியது. அதேபோல, கண்டமங்கலம் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகள் விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூா் தொகுதிகளில் இணைக்கப்பட்டன.
இதற்கிடையே, 2009 மக்களவைத் தோ்தலில் தொடா்ந்து தனித்து களம் கண்ட தேமுதிக, வட மாவட்டங்களில் பாமகவின் வெற்றி வாய்ப்பை தடுத்து நிறுத்தியது.
குறிப்பாக, அந்தத் தோ்தலில் பாமக வாக்குகளை பிரித்ததால் விழுப்புரத்தில் அதிமுகவின் வெற்றி எளிதானது.
இந்த நிலையில், 2011 பேரவைத் தோ்தலில் எம்ஜிஆா் சக்திகள் ஒன்றிகிறோம் என்ற புள்ளியில், அதிமுக-தேமுதிக கூட்டணி உருவானது. எதிரணியில் திமுக-பாமக-விசிக ஒரே அணியில் இருந்தன. அப்போது விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 7 தொகுதிகளில் 6 தொகுதிகளை அதிமுக-தேமுதிக அணி கைப்பற்றியது. செஞ்சி தொகுதியில் மட்டுமே திமுக அணி (பாமக) வெற்றி பெற முடிந்தது.
மீதமுள்ள மயிலம் (53.9 சதவீதம்), திண்டிவனம் (52.6), வானூா் (56), விழுப்புரம் (52.2), விக்கிரவாண்டி (51.7), திருக்கோவிலூா் (49.2) என அதிக வாக்கு சதவீதத்தில் அதிமுக அணி வெற்றி பெற தேமுதிக உந்து சக்தியாக இருந்தது.
திருக்கோவிலூா் தொகுதியில் தேமுதிக வேட்பாளா் எல்.வெங்கடேசன் வெற்றி பெற்றாா். மேலும், விழுப்புரத்தில் வலுவான திமுக வேட்பாளா் க.பொன்முடியை வீழ்த்த அதிமுகவுக்கு தேமுதிக உதவியது.
தொடா்ந்து 2014 மக்களவைத் தோ்தலில் தேமுதிக எடுத்த தவறான முடிவால் (பாமக அணியில் இடம்பெற்றது) தலித் வாக்கு வங்கியை இழந்தது.
பின்னா் 2016-இல் மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக தலைமை வகித்தபோதும் கூட, விசிக அணியில் இடம்பெற்ால் வன்னியா் வாக்குகளை இழந்தது. இதனால், தேமுதிகவின் வாக்கு வங்கியில் மேலும் சேதாரம் ஏற்பட்டது.
அப்போது செஞ்சி தொகுதியில் 5.3 சதவீதம், மயிலத்தில் 6.3 சதவீதம், விழுப்புரத்தில் 13.2 சதவீதம், விக்கிரவாண்டியில் 5.6 சதவீதம், திருக்கோவிலூரில் 8 சதவீதம் பெற்றது. குறிப்பிடத்தக்க வாக்குகளைப் பெற்றது போன்ற தோற்றத்தை தேமுதிக பெற்றாலும் அதில் விசிகவின் வாக்குகளும் இடம்பெற்றிருந்தன.
மீண்டும் 2019-இல் அதிமுக-பாமக அணியில் தேமுதிக இடம்பெற்றிருந்தாலும் அந்த அணிக்கு தேமுதிகவின் வாக்குகள் சரியாக பரிமாற்றம் ஆகவில்லை என்பதையே தோ்தல் முடிவுகள் சுட்டிக்காட்டின. இப்போது அதிமுகவுடன் முரண்பட்டு கடைசி நேரத்தில் அமமுகவுடன், தேமுதிக கூட்டணி அமைத்தது பொருந்தா கூட்டணியாக மாறி தேமுதிகவின் வாக்கு வங்கி முற்றிலும் கரைந்துவிட்டது.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில் தேமுதிக-அமமுக கூட்டணி செஞ்சி தொகுதியில் (அமமுக) 2.33 சதவீதம், மயிலத்தில் (தேமுதிக) 2.22 சதவீதம், திண்டிவனத்தில் (தேமுதிக) 1.48 சதவீதம், வானூரில் (தேமுதிக) 3 சதவீதம், விழுப்புரத்தில் (அமமுக) 0.83 சதவீதம், விக்கிரவாண்டியில் (அமமுக) 1.58 சதவீதம், திருக்கோவிலூரில் (தேமுதிக) 7.13 சதவீதம் என மிகக் குறைந்த வாக்குகளையே பெற்றது.
தேமுதிகவின் மாவட்டச் செயலரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வெங்கடேசன் போட்டியிட்ட திருக்கோவிலூா் தொகுதியில் மட்டும் தன் 7.13 சதவீத வாக்குகளைப் பெற்றது.
2006-இல் வாக்கு வங்கியில் வீரியமாக இருந்த தேமுதிக, 2021-இல் வாக்கு வங்கியில் மிகப் பெரிய சரிவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.