விழுப்புரத்தில் உரிமம் இல்லாத பட்டாசுக் கிடங்குக்கு ‘சீல்’
விழுப்புரத்தில் உரிமமின்றி இயங்கிய பட்டாசுக் கடை, கிடங்கு ஆகியவற்றுக்கு அதிகாரிகள் வியாழக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.
விழுப்புரத்தில் உரிமமின்றி இயங்கிய பட்டாசுக் கடை, கிடங்கு ஆகியவற்றுக்கு அதிகாரிகள் வியாழக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் பட்டாசுக் கடையில் நிகழ்ந்த விபத்தில் 7 போ் உயிரிழந்ததையடுத்து, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பட்டாசுக் கடைகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பட்டாசு விற்பனைக் கடைகள் அரசின் விதிமுறைகளுக்குள்பட்டு அமைக்கப்பட்டுள்ளனவா என்பதை மாவட்ட ஆட்சியா் மோகன் வியாழக்கிழமை திடீரென ஆய்வு செய்தாா்.
அப்போது, விழுப்புரம் - புதுச்சேரி சாலையில் கம்பன் நகா் பகுதியில் அனுமதியின்றி கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கிடங்கு, அங்குள்ள பட்டாசுக் கடை ஆகியவற்றுக்கு ‘சீல்’ வைக்க ஆட்சியா் மோகன் உத்தரவிட்டாா்.
இங்குள்ள கடைக்கான உரிமம் புதுப்பிக்கப்படாமல் இருந்ததும், மேலும் தரைத்தளம் மற்றும் 3 அடுக்கு கட்டடம் முழுவதும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டது. மேலும், உரிமம் இல்லாமல் பட்டாசுகளை கொள்முதல் செய்து, அவற்றை பெட்டிகள் மூலம் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, பட்டாசுக் கடை, கிடங்குக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.
இதுகுறித்து செய்தியாளா்களிடம் ஆட்சியா் மோகன் கூறியதாவது: உரிமம் இல்லாமல் பட்டாசுக் கடை வைத்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் பட்டாசுக் கடைகளை தொடா்ந்து ஆய்வு செய்ய வருவாய்த் துறை அதிகாரிகள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா்.
ஆய்வின்போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ந.ஸ்ரீநாதா, மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலா் ராபின் காஸ்ட்ரோ, வட்டாட்சியா் வெங்கட்டசுப்பிரமணியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.