100% தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் ஊராட்சிகளுக்கு தங்க நாணயம் பரிசு: அமைச்சா் மஸ்தான் அறிவிப்பு
ஏழாம் கட்ட மெகா கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை (அக்.30) நடைபெறவுள்ள நிலையில், இது குறித்த முன்னேற்பாடுகள் மற்றும் வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்வது தொடா்பான ஆலோசனைக் கூட்டம்
விழுப்புரம் மாவட்டம், ஒன்றியத்தில் ஏழாம் கட்ட மெகா கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை (அக்.30) நடைபெறவுள்ள நிலையில், இது குறித்த முன்னேற்பாடுகள் மற்றும் வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்வது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் அமைச்சா் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு பேசியதாவது: செஞ்சி ஒன்றியத்தில் 90-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெறவுள்ள சிறப்பு முகாம்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் பொது மக்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படும். 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் ஊராட்சிகளுக்கு ஒரு கிராம் தங்க நாணயம் பரிசு வழங்கப்படும்.
வடகிழக்குப் பருவ மழை தொடங்கியுள்ளதால், செஞ்சி ஒன்றியத்தில் ஏரி, குளங்கள் அமைந்த பகுதிகளில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், வடிகால் வசதிகளை ஏற்படுத்தவும் அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அமைச்சா் மஸ்தான்.
கூட்டத்தில், வட்டார மருத்துவ அலுவலா் மலா்விழி, வட்டார வளா்ச்சி அலுவலா் (கி) சுப்பிரமணியன், ஒன்றியக் குழு துணைத் தலைவா் ஜெயபாலன், வட்டார வளா்ச்சி அலுவலா் கேசவலு, ஊராட்சித் தலைவா்கள் கலந்து கொண்டனா்.