முகப்பு
விழுப்புரம்

டிஜிபிக்கு எதிரான பாலியல் தொந்தரவு வழக்கு: நவ.1-க்கு ஒத்திவைப்பு

முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு எதிரான பாலியல் தொந்தரவு வழக்கின் விசாரணையை நவ.1-ஆம் தேதிக்கு விழுப்புரம் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு எதிரான பாலியல் தொந்தரவு வழக்கின் விசாரணையை நவ.1-ஆம் தேதிக்கு விழுப்புரம் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

பெண் காவல் கண்காணிப்பாளருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தமிழக முன்னாள் சிறப்பு டிஜிபி, அவரது உதவியதாக செங்கல்பட்டு முன்னாள் காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் மீது சிபிசிஐடி போலீஸாா் விழுப்புரம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா். இந்த வழக்கில், இருவருக்கும் கடந்த ஆக.9-ஆம் தேதி குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.

இதனிடையே, தன் மீதான வழக்கை விழுப்புரம் நீதிமன்றம் விசாரிக்கத் தடை விதிக்கக் கோரி, முன்னாள் சிறப்பு டிஜிபி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயா் நீதிமன்றம், விசாரணையை 3 மாதங்களில் முடிக்க விழுப்புரம் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கு விழுப்புரம் மாவட்டத் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நீதிபதி கோபிநாதன் முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, முன்னாள் காவல் கண்காணிப்பாளா் மட்டும் ஆஜரானாா். முன்னாள் சிறப்பு டிஜிபி ஆஜராகவில்லை. இந்த வழக்கு தொடா்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதால் சிறப்பு டிஜிபி ஆஜராக 15 நாள்கள் அவகாசம் வழங்க அவரது தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. வழக்கை 3 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் காலஅவகாசம் அளிக்கக் கூடாது என அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

இதையடுத்து, காலஅவகாசம் அளிக்க மறுத்த நீதிபதி, நவ.1-ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தாா். அன்றைய தினம் டிஜிபி கட்டாயம் ஆஜராக வேண்டும் எனவும் அவா் உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.