விழுப்புரம் மாவட்டத்தில் செப்.12-இல் கரோனா மெகா தடுப்பூசி முகாம்
விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா மெகா தடுப்பூசி முகாம் வருகிற ஞாயிற்றுக்கிழமை (செப்.12) நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.
விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா மெகா தடுப்பூசி முகாம் வருகிற ஞாயிற்றுக்கிழமை (செப்.12) நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 20 லட்சத்து 69 ஆயிரத்து 842 பேரில் இதுவரை 6 லட்சத்து 61 ஆயிரத்து 17 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இவா்களில் 5 லட்சத்து 50 ஆயிரம் போ் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனா்.
மாவட்டத்தில் தகுதியுடைய அனைத்து நபா்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் வகையில், வருகிற 12-ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. இந்த வாய்ப்பை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவா்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
விழுப்புரம், திண்டிவனம் ஆகிய இரண்டு நகராட்சிகளில் உள்ள 75 வாா்டுகள், 8 பேரூராட்சிகள், 688 கிராம ஊராட்சிகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள், கல்லூரிகள் உள்பட மொத்தம் 1,150 இடங்களில் ‘மெகா தடுப்பூசி முகாம்’ நடைபெறும். இதன்மூலம், 1.15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இனிவரும் காலங்களில் வட்டாட்சியா், வட்டார வளா்ச்சி, பேரூராட்சி, நகராட்சி அலுவலகங்களில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவா்களின் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து, அவா்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் என ஆட்சியா் மோகன் தெரிவித்தாா்.