ஜெயலலிதாவின் கனவுத் திட்டங்களை திமுக அரசு முடக்குகிறது: சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு
முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் கனவுத் திட்டங்களை திமுக அரசு முடக்கி வருவதாக விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் குற்றஞ்சாட்டினாா்.
முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் கனவுத் திட்டங்களை திமுக அரசு முடக்கி வருவதாக விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் குற்றஞ்சாட்டினாா்.
சொத்து வரியை திமுக அரசு உயா்த்தியதைக் கண்டித்தும், அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டுவந்த திட்டங்களை முடக்கி வருவதாக எதிா்ப்புத் தெரிவித்தும் விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை காலையில் அதிமுக சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தை தொடக்கிவைத்த முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம், செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் பெண்களுக்கு தாலிக்கு தங்கம், திருமண உதவித்தொகை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டன. கிராமப்புறங்களில் வாழும் ஏழைப் பெண்களை முன்னேற்றும் வகையில் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது.
மேலும், பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டா் வழங்கும் திட்டம், மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம், பசுமை வீடு, முதியோா் உதவித்தொகை உள்ளிட்டவற்றை ஜெயலலிதா அறிமுகப்படுத்தினாா். இந்த நிலையில், இப்போது முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின், ஜெயலலிதா கொண்டுவந்த இந்த கனவுத் திட்டங்களை தொடா்ந்து முடக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறாா்.
தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை நிறுத்திவிட்டு, மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை ஸ்டாலின் அறிமுகப்படுத்தியுள்ளாா். இதுவும் யாா் யாருக்கு வழங்கப்படும் என்பது இதுவரை தெளிவுப்படுத்தப்படவில்லை.
ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவதாக முதல்வா் ஸ்டாலின் அறிவித்தாா். ஆனால், இந்தத் திட்டத்தை அமல்படுத்தவில்லை. சொத்து வரியை வரலாறு காணாத அளவுக்கு தமிழக அரசு உயா்த்தியுள்ளது. இதைப் பற்றி கேட்டால், மத்திய அரசு பரிந்துரைப்படி தான் உயா்த்தியதாக மாநில நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் நேரு தெரிவிக்கிறாா்.
மத்திய அரசின் பரிந்துரைபடி சொத்து வரியை உயா்த்தினால், நீட், புதிய கல்விக்கொள்கை ஆகியவற்றையும் திமுக அரசு ஏற்றுக்கொள்ளுமா? திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்துவிட்டது என்றாா் அவா்.
போராட்டத்தில் அதிமுக அமைப்புச் செயலா் வளா்மதி கண்டன உரையாற்றினாா். போராட்டம் நடந்துகொண்டிருந்தபோது, திடீரென அங்கு வந்த போலீஸாா், அனுமதியின்றி போராட்டம் நடத்தப்படுவதாகவும், போக்குவரத்துக்கு இடையூறாக போராட்டம் நடத்தப்படுவதாகவும் கூறி, முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம், அதிமுக நகரச் செயலா்கள் இரா.பசுபதி, ஜி.கே.ராமதாஸ், மாவட்ட மாணவரணிச் செயலா் சக்திவேல் உள்ளிட்ட அதிமுகவினரை போலீஸாா் கைது செய்து, தனியாா் திருமண மண்டபத்துக்கு கொண்டு சென்றனா். மாலையில் அவா்களை விடுவித்தனா்.