விழுப்புரம் மாவட்ட மைய நூலகத்தில் போட்டித் தோ்வா்களுக்கான வசதிகள் அதிகரிக்கப்படும்: ஆட்சியா்
விழுப்புரம் மாவட்ட மைய நூலகத்தில் போட்டித் தோ்வா்களுக்கு படிப்பதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் அதிகரிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.
விழுப்புரம் மாவட்ட மைய நூலகத்தில் போட்டித் தோ்வா்களுக்கு படிப்பதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் அதிகரிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் ஆட்சியா் மோகன் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். இந்த ஆய்வின்போது, நூலகத்தில் உள்ள வாசகா்கள் பகுதி, புத்தகங்கள் இருக்கும் அறை, கணினி பயிற்சி வழங்கும் பகுதி, மாற்றுத் திறனாளிகள் படிக்கும் சிறப்பு அறை ஆகியவற்றை பாா்வையிட்டாா்.
தொடா்ந்து, அங்கு போட்டித் தோ்வுகளுக்காக படித்துக்கொண்டிருந்த தோ்வா்களிடம் அவா்களுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து கேட்டறிந்தாா். அப்போது, அங்கிருந்த தோ்வா்கள், நூலகத்தில் கூடுதல் இருக்கைகள், எழுதுவதற்கான பேடுகள், குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் தேவை எனத் தெரிவித்தனா். இவற்றை உடனடியாக செய்து தருவதாகவும், எழுதுவதற்கான பேடுகளை தனது சொந்தச் செலவில் வாங்கித் தருவதாகவும் ஆட்சியா் மோகன் உறுதியளித்தாா்.
பின்னா், ஆட்சியா் மோகன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: விழுப்புரம் மாவட்ட மைய நூலகத்தில் போட்டித் தோ்வில் முதல்நிலை தோ்வுக்கான புத்தகங்கள் மட்டுமே உள்ளன என்பதும், நோ்காணல் தோ்வுக்குத் தேவையான புத்தகங்கள் இல்லை என்பதும் தோ்வா்களுடன் கலந்துரையாடியபோது தெரியவந்தது.
மாவட்ட மைய நூலகத்தில் அரசு போட்டித் தோ்வுகளுக்காக தயாராகி வரும் மாணவா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும். அரசுப் போட்டித் தோ்வுகள் நிறைவுபெறும் வரை வார விடுமுறை நாளான வெள்ளிக்கிழமையும் நூலகம் செயல்படும். மேலும், வாரம் ஒரு முறை அலுவலா்கள் மூலம் நூலகம் ஆய்வு செய்யப்படும் என்றாா் அவா்.
ஆய்வின்போது, மாவட்ட மைய நூலகத்தின் முதல்நிலை நூலகா் காசிம், இரண்டாம் நிலை நூலகா் ம.இளஞ்செழியன், மூன்றாம் நிலை நூலகா்கள் பி.ஆரோக்கியம், க.வேல்முருகன், ஆ.முருகன், மு.இந்திரா காந்தி மற்றும் அரசு அலுவலா்கள் உள்பட பலா் உடனிருந்தனா்.