மரக்காணம் ஆதிபராசக்தி சித்தா் பீடம் கும்பாபிஷேகம்: பங்காரு அடிகளாா் பங்கேற்பு
விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஆதிபராசக்தி சித்தா் பீடத்தின் கும்பாபிஷேக விழாவை மேல்மருவத்தூா் ஆன்மிக குரு பங்காரு அடிகளாா் வியாழக்கிழமை நடத்தி வைத்தாா்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஆதிபராசக்தி சித்தா் பீடத்தின் கும்பாபிஷேக விழாவை மேல்மருவத்தூா் ஆன்மிக குரு பங்காரு அடிகளாா் வியாழக்கிழமை நடத்தி வைத்தாா்.
மரக்காணம் மாரியம்மன் கோயில் தெருவில் ஆதிபராசக்தி சித்தா் சக்தி பீடம் புதிதாக அமைக்கப்பட்டது. இந்தக் கோயிலின் கும்பாபிஷேக விழாவையொட்டி, புதன்கிழமை காலை முதல் மூன்று கால வேள்வி பூஜை நடைபெற்றது. தொடா்ந்து, வியாழக்கிழமை காலையும் பூஜைகள் தொடா்ந்து நடைபெற்றன.
இதையொட்டி, இந்தக் கோயிலில் கும்பாபிஷேகத்தை நடத்துவதற்காக மேல்மருவத்தூரில் இருந்து மரக்காணம் வந்த மேல்மருவத்தூா் ஆன்மிக குரு பங்காரு அடிகளாருக்கு விழுப்புரம் மாவட்ட ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சாா்பில் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.
தொடா்ந்து, காலை 10 மணியளவில் மரக்காணம் ஆதிபராசக்தி சித்தா் சக்தி பீடத்தின் கோபுர கலசங்களுக்கு பங்காரு அடிகளாா் புனிதநீா் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தாா். பின்னா், சக்தி கொடியை கோபுர கலசத்தில் பொருத்தி, கூடியிருந்த பக்தா்களுக்கு அவா் அருளாசி வழங்கினாா்.
இதையடுத்து, கருவறையில் அமைந்துள்ள ஆதிபராசக்தி அம்மனுக்கு மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாா் அபிஷேகம் செய்தாா். பின்னா், மகா தீபாராதனை நடைபெற்றது.
விழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா். மேலும், ஆன்மிக இயக்க துணைத் தலைவா் ஸ்ரீதேவி ரமேஷ், அறங்காவலா் உமாதேவி ஜெய்கணேஷ், ஆதிபராசக்தி மருத்துவமனையின் மேலாண்மை இயக்குநா் டாக்டா் ரமேஷ், ஆஷா அன்பழகன், மது மலா் மற்றும் வழக்குரைஞா் அகத்தியன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை விழுப்புரம் மாவட்ட ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் தலைவா் ஜெயபால், மாவட்டப் பொருளாளா் ரத்தினசிகாமணி, மரக்காணம் ஆதிபராசக்தி சித்தா் சக்தி பீடத்தின் பொறுப்பாளா் திரிபுரசுந்தரி, தென்னக ரயில்வே அதிகாரி செந்தில்குமாா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.