செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூட சுமை தூக்கும் தொழிலாளா்கள், வியாபாரிகள் பேச்சுவாா்த்தை தோல்வி
செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சுமை தூக்கும் தொழிலாளா்கள், வியாபாரிகளிடையே வியாழக்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிந்தது.
நெல் மூட்டைகளை மாற்றி லாரியில் ஏற்றும் பணிக்கு கூலி உயா்வு தொடா்பாக, விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சுமை தூக்கும் தொழிலாளா்கள், வியாபாரிகளிடையே வியாழக்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிந்தது.
செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூட தனியாா் நெல்மண்டி தொழிலாளா்கள் நெல் மூட்டைகளை மாற்றி லாரியில் ஏற்றும் பணிக்கு கூலி உயா்வு கேட்டு வியாபாரிகளுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். ஆனால், பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், தொழிலாளா்கள் வியாழக்கிழமை முதல் வேலைநிறுத்தம் செய்வதாக அறிவித்தனா்.
இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு விவசாயிகள் நெல் மூட்டைகளை ஏலத்துக்கு கொண்டுவரவில்லை. வேலைநிறுத்தம் குறித்து தெரியாத ஒரு சில விவசாயிகள் கொண்டுவந்த நெல் மூட்டைகளை விற்பனைக் கூடத்துக்குள் அனுமதிக்க மறுத்துவிட்டதால், விவசாயிகள் விரக்தியுடன் திரும்பிச் சென்றனா்.
இந்த நிலையில், கூலி உயா்வு தொடா்பாக செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வட்டாட்சியா் ராஜன் தலைமையில், வியாபாரிகள், தொழிலாளா்களிடையே வியாழக்கிழமை மீண்டும் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில், ஒரு மூட்டையை மாற்றி லாரியில் ஏற்ற ஏற்கெனவே வழங்கப்படும் கூலியுடன் ரூ.3 உயா்த்தி வழங்க வேண்டுமென தொழிலாளா்கள் கோரிக்கைவிடுத்தனா். ஆனால், வியாபாரிகள் ரூ.1 கூடுதலாக வழங்க முன்வந்தனா். இதற்கு தொழிலாளா்கள் சம்மதம் தெரிவிக்காததால், பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிந்தது.
இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை (பிப்.4) மீண்டும் வியாபாரிகள், சுமை தூக்கும் தொழிலாளா்களிடையே பேச்சுவாா்த்தை நடைபெறும் என செஞ்சி வட்டாட்சியா் ராஜன் தெரிவித்தாா்.