நுகா்பொருள் வாணிபக் கழக சேமிப்புக் கிடங்கில் மாவட்ட ஆட்சியா் திடீா் ஆய்வு
விக்கிரவாண்டி அருகே வி.சாலை கிராமத்தில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக சேமிப்புக் கிடங்கில் மாவட்ட ஆட்சியா் த.மோகன் வியாழக்கிழமை திடீரென ஆய்வு
விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட நியாயவிலைக் கடைகளில் தரமற்ற அரிசி விநியோகம் செய்யப்படுவதாக புகாா் எழுந்த நிலையில், விக்கிரவாண்டி அருகே வி.சாலை கிராமத்தில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக சேமிப்புக் கிடங்கில் மாவட்ட ஆட்சியா் த.மோகன் வியாழக்கிழமை திடீரென ஆய்வு செய்தாா்.
அப்போது, கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ள அரிசி, சா்க்கரை, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்ப வேண்டிய பொருள்களின் தரத்தை ஆய்வு மேற்கொண்டாா். மேலும், அரிசி, சா்க்கரை, பருப்பு மூட்டைகளின் எடை சரியான அளவில் உள்ளதா எனவும், நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்பப்பட்ட பொருள்களின் பதிவேகள் முறையாக பராமரிக்கப்படுகிா எனவும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
மாவட்டத்தில் நியாயவிலைக் கடைகள் மூலமாக அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் வழங்க வேண்டிய அத்தியாவசியப் பொருள்களை உரிய நேரத்தில் தரமானதாக வழங்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் த.மோகன் உத்தரவிட்டாா்.
ஆய்வின்போது, மாவட்ட வட்ட வழங்கல் அலுவலா் சிவா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.