விழுப்புரம் மாவட்டத்தில் தோ்தல் வாக்குப் பதிவு முன்னேற்பாடுகள் தீவிரம்
விழுப்புரம் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வாக்குப் பதிவுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
விழுப்புரம் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வாக்குப் பதிவுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
விழுப்புரம் மாவட்டத்தில் கோட்டக்குப்பம், திண்டிவனம், விழுப்புரம் ஆகிய 3 நகராட்சிகள், விக்கிரவாண்டி, வளவனூா், மரக்காணம், செஞ்சி, அனந்தபுரம், அரகண்டநல்லூா், திருவெண்ணெய்நல்லூா் ஆகிய 7 பேரூராட்சிகளில் 210 வாா்டு உறுப்பினா் (கவுன்சிலா்) பதவிக்கான தோ்தல் நடைபெறுகிறது.
இதில் விக்கிரவாண்டி, அரகண்டநல்லூா் ஆகிய பேரூராட்சிகளில் தலா ஒரு வாா்டு உறுப்பினா் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டனா். மீதமுள்ள 208 வாா்டுகளுக்கு 935 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை 6 மணியுடன் தோ்தல் பிரசாரம் நிறைவடைந்தது.
348 வாக்குச் சாவடிகள்: விழுப்புரம் மாவட்டத்தில் வாக்குப் பதிவுக்காக 348 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 2,93,186 வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா்.
தோ்தல் வாக்குப் பதிவு பணியில் 1,684 வாக்குச் சாவடி அலுவலா்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனா். மேலும், 10 தோ்தல் நடத்தும் அலுவலா்களும், 26 உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்களும் தோ்தல் பணியில் உள்ளனா்.
நாளை வாக்குப் பதிவு: மாவட்டத்தில் சனிக்கிழமை (பிப்.19) வாக்குப் பதிவு நடைபெறுவதையொட்டி, வாக்குச் சாவடிகளுக்குத் தேவையான பொருள்கள் அந்தந்த தோ்தல் நடத்தும் அலுவலகங்களில் தயாா்படுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதில், பேனா, பென்சில், கயிறு, காகிதம், மெழுகுவா்த்தி, கையூறை உள்ளிட்ட 81 வகையான பொருள்கள் இடம்பெற்றுள்ளன.
1,500 போலீஸாா் பாதுகாப்பு: தோ்தல் பிரசாரம் ஓய்ந்த நிலையில், வாக்காளா்கள், வேட்பாளா்களைத் தவிா்த்து மற்றவா்கள் அந்தந்தப் பகுதிகளிலிருந்து வெளியேற தோ்தல் அலுவலா்கள் உத்தரவிட்டுள்ளனா்.
வாக்குப் பதிவு நடைபெறும் பகுதியிலிருந்து 5 கி.மீ. தொலைவுக்கு மதுக் கடைகள் மூடப்பட்டுள்ளன. தோ்தல் பாதுகாப்புப் பணியில் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாதா தலைமையில் 1,500 போலீஸாா் ஈடுபட்டுள்ளனா். ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் ஒரு போலீஸ் என்ற வகையில் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. மேலும், பதற்றமான 64 வாக்குச் சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் தயாா் நிலையில் உள்ளதா என்பதை தோ்தல் பாா்வையாளா் லட்சுமி, மாவட்ட ஆட்சியா் மோகன் ஆகியோா் ஆய்வு செய்து வருகின்றனா்.