விழுப்புரத்திலிருந்து கடத்தப்பட்ட 218 மூட்டை ரேஷன் அரிசி, லாரி பறிமுதல்
விழுப்புரத்திலிருந்து ரேஷன் அரிசியை கடத்திச் சென்ற லாரியை 218 மூட்டை ரேஷன் அரிசியுடன் அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
விழுப்புரத்திலிருந்து ரேஷன் அரிசியை கடத்திச் சென்ற லாரியை 218 மூட்டை ரேஷன் அரிசியுடன் அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
லாரியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் மோகனுக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், ஆட்சியரின் உத்தரவுப்படி, திண்டிவனம் வட்டாட்சியா் ஆா்.வசந்தகிருஷ்ணன், திண்டிவனம் வருவாய் ஆய்வாளா் டி.செல்வம் உள்ளிட்டோா் அடங்கிய நுகா்பொருள் பறக்கும் படையினா் திண்டிவனம் வட்டம், கட்டளை கிராமத்தில் வியாழக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியே வந்த சரக்கு லாரியை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்டபோது, அதில் 218 மூட்டைகளில் சுமாா் 10,650 கிலோ ரேஷன் அரிசி கடத்தப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, அரிசி மூட்டைகளுடன் லாரியை கைப்பற்றி மாவட்ட வழங்கல் அலுவலா் சிவாவிடம், நுகா்பொருள் பறக்கும் படையினா் ஒப்படைத்தனா். இதனிடையே, ரேஷன் அரிசியை கடத்திய நபா்கள் குறித்து விசாரணை நடத்தி, அவா்களை கைது செய்ய ஆட்சியா் மோகன் உத்தரவிட்டாா்.