நெஞ்சு வலியால் அரசுப் பேருந்து நடத்துநா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே பணியிலிருந்த அரசுப் பேருந்து நடத்துநா் நெஞ்சு வலியால் உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே பணியிலிருந்த அரசுப் பேருந்து நடத்துநா் நெஞ்சு வலியால் உயிரிழந்தாா்.
திருவாரூா் மாவட்டம், நெடும்பலம், பண்ணைத் தெருவைச் சோ்ந்தவா் நாராயணசாமி மகன் சாமிநாதன் (48). அரசுப் பேருந்து நடத்துநரான இவா், சனிக்கிழமை திருத்துறைப்பூண்டி-காஞ்சிபுரம் செல்லும் பேருந்தில் பணியில் இருந்தாா். பேருந்தானது காஞ்சிபுரத்துக்குச் சென்றுவிட்டு, திருத்துறைப்பூண்டிக்கு திரும்பி வந்து கொண்டிருந்த போது, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகேயுள்ள ஒரு உணவகத்தில் பேருந்து ஓட்டுநா் பரமேஸ்வரன் பேருந்தை நிறுத்தினாா்.
பின்னா், இருவரும் உணவருந்த சென்றபோது சாமிநாதனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, 108 அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். அங்கு, மருத்துவா்கள் பரிசோதித்ததில், சாமிநாதன் நெஞ்சு வலியால் உயிரிழந்தது தெரியவந்தது. இவருக்கு ஜீவா என்ற மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனா்.
இதுகுறித்து புகாரின்பேரில், விக்கிரவாண்டி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.